கிழக்கு மாகாணத்தின் புகழ்பூத்த கல்விக்கூடங்களில் ஒன்றான அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் (தேசிய பாடசாலை) 80ஆவது ஆண்டு நிறைவு அமுத விழா எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதி மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளை ஆராயும் விசேட கள விஜயமொன்றை பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ நேற்று (08) மேற்கொண்டார்.
கல்வி அமைச்சராகவும் பதவி வகிக்கும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் இப்பாடசாலையின் வரலாற்றுச் சிறப்புமிக்க 80ஆவது ஆண்டு பெருவிழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார். இதனையொட்டி பாடசாலை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் உட்கட்டமைப்பு வசதிகள், அதிதிகள் வரவேற்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விழா மேடை அமைப்பு உள்ளிட்ட விடயங்களை நேரில் கண்டறிவதற்காகவே இந்த விசேட கள விஜயம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகளுடன் பிரதி அமைச்சர் கலந்துரையாடினார். பிரதமரின் வருகையின் போது பாடசாலையின் நீண்டகாலக் கல்வித் தேவைகள் மற்றும் பௌதீக வளப் பற்றாக்குறைகள் தொடர்பில் கவனத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
இந்தக் கள விஜயத்தில் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸவுடன் அக்கரைப்பற்று தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளரும் மாநகர சபை உறுப்பினருமான றமீஸ் முகைடீன், பிரதி அமைச்சரின் இணைப்பாளர் சுல்தான் சத்தார் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் அக்கரைப்பற்று செயற்பாட்டாளர் ஹாரூன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு ஏற்பாடுகளைப் பார்வையிட்டனர்.
கடந்த எட்டு தசாப்தங்களாக அம்பாறை மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியில் பெரும் பங்காற்றி பல கல்விமான்களையும் துறைசார் நிபுணர்களையும் உருவாக்கிய பெருமைக்குரிய அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் இந்த 80ஆவது ஆண்டு நிறைவு அமுத விழாவை பிரதேசத்தின் மாபெரும் கல்விப் பெருவிழாவாக நடாத்துவதற்கு பாடசாலை சமூகமும் பழைய மாணவர்களும் தீவிர ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.