Top News
| இலங்கைச் சட்டத்துறையில் 40 ஆண்டுகள் நிறைவு: ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் எம்.பி.க்கு பொழியும் வாழ்த்து மழை | | 40,000 புனித குர்ஆன் பிரதிகளை விடுவித்து 83 அரபுக் கல்லூரிகளின் பதிவுத் தடையை நீக்க அவசர நடவடிக்கை | | இலங்கை கிரிக்கெட் புள்ளிக்கணிப்பாளராக நிந்தவூர் அப்துர் ரஹ்மான் தெரிவு |
Nov 20, 2026

பொலிஸாரின் பெயரில் போலி அபராத SMS: சாரதிகளுக்கு அரசாங்கம் அவசர எச்சரிக்கை

Posted on November 10, 2026 by Admin | 69 Views

நாட்டில் வாகனச் சாரதிகளைக் குறிவைத்து முன்னெடுக்கப்படும் புதிய இணையவழி மோசடி குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிவேகமாக வாகனம் செலுத்தியதாகக் குறிப்பிட்டு இலங்கைப் பொலிஸாரின் பெயரில் அபராதம் செலுத்துமாறு கோரும் போலியான குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் ‘iMessage’ தகவல்கள் சாரதிகளின் கையடக்கத் தொலைபேசிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இச்செய்திகளில் ‘GovPay’ ஊடாக உடனடியாக அபராதத் தொகையைச் செலுத்துமாறு கூறி போலியான இணைய இணைப்புகளும் (Links) உள்ளடக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மோசடி தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, “பொலிஸாரின் பெயரில் அனுப்பப்படும் இவ்வாறான குறுஞ்செய்திகள் முற்றிலும் போலியானவை. போக்குவரத்து விதிமீறல் அபராதங்களைச் செலுத்துமாறு ‘GovPay’ ஊடாக அரசாங்கத்தினால் எவ்விதக் குறுஞ்செய்திகளும் அனுப்பப்படுவதில்லை” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக lygov.art போன்ற போலியான இணையத்தள முகவரிகளைப் பயன்படுத்தி பொதுமக்களின் தனிப்பட்ட தரவுகளையும் வங்கிக் கணக்கு விபரங்களையும் சூறையாடுவதே இம்மோசடியாளர்களின் பிரதான நோக்கமாகும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ‘GovPay’ கொடுப்பனவு முறைமையானது அங்கீகரிக்கப்பட்ட மற்றும் மிகவும் பாதுகாப்பான நடைமுறைகளின் கீழ் மாத்திரமே செயற்படுகிறது என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்.

பொதுமக்களுக்கான பாதுகாப்பு அறிவுறுத்தல்கள்:

இணையவழி நிதி மோசடிகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பின்வரும் விடயங்களைக் கவனத்திற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்:

1. சந்தேகத்திற்கிடமான முறையில் வரும் குறுஞ்செய்திகளில் உள்ள இணைய இணைப்புகளை (Links) எக்காரணம் கொண்டும் அழுத்த வேண்டாம்.

2. இத்தகைய மோசடிக் குறுஞ்செய்திகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்த்துக்கொள்ளவும்.

3. உங்களது வங்கிக் கணக்கு விபரங்கள், இரகசியக் கடவுச்சொற்கள் (Passwords) அல்லது தனிப்பட்ட தகவல்களை இவ்வாறான இணையத்தளங்களில் பகிர வேண்டாம்.

4. அரசாங்க இணையவழிச் சேவைகளைப் பெறும்போது, எப்போதும் gov.lk என்ற உத்தியோகபூர்வ இணைய முகவரியைக் கொண்ட தளங்களை மாத்திரம் பயன்படுத்தவும்.

பொலிஸாரின் பெயரில் வரும் உறுதிப்படுத்தப்படாத குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், விழிப்புணர்வுடன் செயற்படுவதன் மூலம் வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் திருடப்படுவதைத் தவிர்த்துக்கொள்ள முடியும் எனவும் அரசாங்கம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.