Top News
| கிழக்கு மாகாண சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக ஏ.எல்.தௌபீக் நியமனம் | | எரிபொருள் QR முறைமை மிகவும் கடுமையான முறையில் அமுல்படுத்தப்படும் | | கிழக்கு மாகாண கடமை நிறைவேற்று அதிபர் பிரச்சினை குறித்து ஆளுநருடன் உதுமாலெப்பை எம்பி சந்திப்பு |
Jun 1, 2026

பாராளுமன்றத்தில் மீனவர்களின் குரலாக ஒலித்து 10 இலட்சத்தை பெற்றுக் கொடுத்த உதுமாலெப்பை எம்பி

Posted on August 8, 2025 by Admin | 328 Views

(அபூ உமர்)

மரணமடைந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு இனிமேல் ரூ.10 இலட்சம் நஷ்டஈடு வழங்கப்படும் என மீன்பிடி அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (07.08.2025), கௌரவ சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நடைபெற்ற அமர்வின் போது, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

உதுமாலெப்பை தனது கேள்வியில், 2024 ஜூலை 12ஆம் திகதி அட்டாளைச்சேனை கப்பலடி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று, தமிழகக் கடலில் கரையொதுங்கிய ஈ.எல். இர்பான் மீனவர் மற்றும் மரணமடைந்த கே.எஸ். நிஷ்பார் மீனவரைப் பற்றிக் கேள்வி எழுப்பினார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளதா எனவும், எவ்வளவு தொகை வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் விளக்கமளிக்கக் கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், மரணமடைந்த நிஷ்பார் மீனவரின் குடும்பத்துக்கு நஷ்டஈடு விண்ணப்பம் வழங்கப்பட்டிருப்பதோடு, நஷ்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், தமிழ்நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்களின் படகுகளை மீட்டுக்கொண்டு, அவை மீனவர்களிடம் ஒப்படைக்கவும் , சேதமடைந்த படகுகளுக்கான நஷ்டஈடும் , கடலில் மரணித்த மீனவர்களுக்கு வழங்கப்படும் நஷ்டஈட்டின் தொகை எவ்வளவு என்பதனையும் தெளிவுபடுத்துமாறு உதுமாலகப்பை எம்பி இரண்டாவது வினாவைத் தொடுத்தார்.

உதுமாலெப்பையின் இரண்டாவது கேள்விக்குப் பதிலளிக்கையில், அமைச்சர் கூறியதாவது:

“முந்தைய காலங்களில் மரணமடைந்த மீனவர்களுக்கு ரூ.2 இலட்சம் நஷ்டஈடு வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்த தொகையை ரூ.10 இலட்சமாக உயர்த்த தீர்மானித்துள்ளோம். இது பயங்கரமான சூழ்நிலைகளில் கடலில் உயிரிழக்கும் மீனவர்களின் குடும்பங்களுக்கு தற்காலிக நிவாரணமாக அமையும். மேலும், தமிழ்நாட்டில் கரையொதுங்கி பல மாதங்கள் தடுத்து வைக்கப்பட்ட மீனவர்களுக்கும் தேவையான நஷ்டஈடு மற்றும் வசதிகள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.”

அதனைத் தொடர்ந்தும், பருத்தித்துறை மீனவர் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்கள் தமிழ்நாட்டில் கரையொதுங்கிய சம்பவம் தொடர்பாகவும் உதுபாலெப்பை எம்பி எழுப்பிய கேள்விக்கு, அதற்கான நஷ்டஈடு நடவடிக்கைகள் குறித்து அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.