அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் என்ற அரசின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கல்வி அமைச்சு தெளிவுபடுத்தியுள்ள நிலையில் அந்த முடிவுக்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிந்தவுடன் பாடசாலைகள் மீண்டும் திறக்கும் நாளில் ஆசிரியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
“இந்த முடிவை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். இது எந்தவொரு கல்வி ஆய்வோ அல்லது உளவியல் கருத்தாய்வோ அடிப்படையாகக் கொண்ட தீர்மானமல்ல. எனவே, பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் திட்டத்தை அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.”
மேலும், “இந்த முன்மொழிவை எந்தவித காரணத்திற்கும் சங்கம் ஏற்கப் போவதில்லை. ஆனால் தேவையானால் அதிகாரிகளுடன் கலந்துரையாடலுக்கு தயாராக உள்ளோம்,” என்றும் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.