Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

சாரதி அனுமதிப்பத்திரங்களின் காலம் நீடிப்பு

Posted on January 27, 2026 by Admin | 453 Views

2025ஆம் ஆண்டின் 04ஆம் இலக்க மோட்டார் வாகன (சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை தற்காலிகமாக நீடித்தல்) கட்டளையைப் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்க அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்துக் கொள்வதில் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

மேலும் அந்த காலப்பகுதியில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரங்கள் விநியோகம் மற்றும் புதுப்பித்தல் தொடர்பான கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக சேவைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையை கருத்தில் கொண்டு, வீதிப் பாதுகாப்பு அல்லது வீதியைப் பயன்படுத்துவோருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் 2025 நவம்பர் 25 முதல் 2025 டிசம்பர் 24 வரை செல்லுபடியாகும் காலம் நிறைவடையவிருந்த சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை அவை காலாவதியாகும் திகதியிலிருந்து மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக 2025 டிசம்பர் 17ஆம் திகதியிட்ட 2467/52 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் குறித்த கட்டளை வெளியிடப்பட்டுள்ளது.

மோட்டார் வாகனச் சட்டம் (203ஆம் அதிகாரச் சட்டமான) உடைய ஏற்பாடுகளுக்கு அமைவாக இக்கட்டளையைப் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.