Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
May 31, 2026

மாணவர்களிடையே வேகமாகப் பரவும் வைரஸ் காய்ச்சல்

Posted on May 8, 2026 by Admin | 139 Views

கொட்டபொல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அண்மையில் பதிவான காய்ச்சல் “மெனிஞ்ஜைட்டிஸ்” (Meningitis) வைரஸால் ஏற்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தொற்றுநோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் பாலித கருணாபேம விளக்கமளிக்கையில் கடந்த ஒரு மாத காலத்தில் மொத்தம் 47 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.

காய்ச்சல், கடுமையான தலைவலி மற்றும் வாந்தி ஆகியவை நோயின் முக்கிய அறிகுறிகளாகக் காணப்படுகின்றன. குறிப்பாக 14 முதல் 15 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களிடையே இந்த நோய் அதிகமாகப் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட அனைவரும் தெனியாய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததுடன், பெரும்பாலானோர் தற்போது முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக நோய்த்தொற்று பரவல் கணிசமாகக் குறைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். முறையான சிகிச்சையின் மூலம் 6 முதல் 7 நாட்களுக்குள் நோயிலிருந்து மீள முடியும் என்றும் டாக்டர் கருணாபேம கூறினார்.

அசுத்தமான நீர் மற்றும் உணவு மூலமாகவே இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் அப்பகுதி மக்கள் நீரை கொதிக்க வைத்து ஆறவிட்டு அருந்துவதுடன், சுத்தமான உணவுகளை மட்டுமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தெனியாய பகுதியிலேயே இந்த நோய்த்தொற்று அதிகமாக பதிவாகியுள்ளதாகவும் ஏனைய பகுதிகளில் வசிப்பவர்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.