Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

கிண்ணியா கல்வி வலயத்தின் திட்டமிடல் உதவிக் கல்விப் பணிப்பாளராக ஹாஸிக் நியமனம்

Posted on May 12, 2026 by Admin | 286 Views


(ஒலுவில் செய்தியாளர்)

ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த எஸ். ஹாஸிக் (SLEAS) அவர்கள் இலங்கை கல்வி நிர்வாக சேவை துறையில் தொடர்ச்சியான முன்னேற்றங்களைப் பதிவு செய்து வருகிறார்.

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் ஆசிரியராக கடமையாற்றிய அவர், கல்வி மற்றும் நிர்வாகத் துறைகளில் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் திறமையின் மூலம் தற்போது கிண்ணியா கல்வி வலயத்தின் திட்டமிடல் உதவிக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்வி நிர்வாக சேவையில் இணைந்த பின்னர் ஹாஸிக் அவர்கள் கிண்ணியா கல்வி வலயத்தின் தமிழ் பாட உதவிக் கல்விப் பணிப்பாளராகவும், முள்ளிப்பொத்தானை கோட்டக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றினார். இப்பொறுப்புகளில் அவர் வெளிப்படுத்திய திறமையான நிர்வாக செயல்பாடுகள், கல்வி அபிவிருத்தி தொடர்பான திட்டமிடல்கள், ஆசிரியர்களுடனான ஒற்றுமையான பணிச்சூழல் மற்றும் மாணவர் நலன் சார்ந்த செயற்பாடுகள் ஆகியவை அவருக்கு கல்வித் துறையில் தனித்துவமான மரியாதையை ஏற்படுத்தியுள்ளன.

அவரது அர்ப்பணிப்பு,செயற்பாட்டு திறன் விளைவாக கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்தின் திட்டமிடல் உதவிக் கல்விப் பணிப்பாளராக உடனடியாகப் பொறுப்பேற்குமாறு அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். இது அவரது கல்வி நிர்வாகப் பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய காலப்பகுதியிலும் கல்வி நிர்வாக அதிகாரியாக செயல்படுகின்ற காலப்பகுதியிலும் ஆசிரியர்கள் மற்றும் கல்விசார் பணியாளர்களுடன் மரியாதையுடனும் மனிதநேய அணுகுமுறையுடனும் அகங்காரமின்றி பணிவாக செயல்படுகிறவர் என ஹாஸிக் அவர்கள் பரவலாகப் ஆசிரியர்களாலும் அதிபர்களாலும் பாராட்டப்படுகிறார். கல்விச் சேவையை ஒரு பொறுப்புணர்வான சமூகப் பணியாகக் கருதி அவர் மேற்கொண்ட பணிகள் பல இளம் கல்வியாளர்களுக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளன.

ஒலுவில் பிரதேசத்திலிருந்து இலங்கை கல்வி நிர்வாக சேவையில் உயர்ந்த நிலையை அடைந்த முதலாவது அதிகாரிகளில் ஒருவராகத் திகழும் ஹாஸிக் அவர்கள் தனது சொந்த ஊருக்கும் அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். அவரின் இந்த முன்னேற்றம் பல மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் புதிய ஊக்கமாக அமையும்.