Top News
| அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் | | பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு | | அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு |
Oct 15, 2026

கிழக்கு மாகாண கடமை நிறைவேற்று அதிபர் பிரச்சினை குறித்து ஆளுநருடன் உதுமாலெப்பை எம்பி சந்திப்பு

Posted on June 1, 2026 by Admin | 315 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நீண்டகாலமாக நிலவி வரும் கடமை நிறைவேற்று (Performing) அதிபர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் எனும் கோரிக்கையினை அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவை திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் நேரில் இன்று (01) சந்தித்து கலந்துரையாடினார்.

கிழக்கு மாகாணத்தில் சுமார் 15 வருடங்களுக்கும் மேலாக பாடசாலை நிர்வாகத்தை வழிநடாத்தி, கல்வி நடவடிக்கைகளை இடையறாது முன்னெடுத்துச் சென்ற கடமை நிறைவேற்று அதிபர்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும் என கிழக்கு மாகாண கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பையிடம் அண்மையில் ஒரு கோரிக்கையை முன்வைத்திருந்தது. அதன் தொடர்ச்சியாகவே இந்த அவசர சந்திப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த நியாயமான கோரிக்கையினை உன்னிப்பாகக் கேட்டறிந்த ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, கடமை நிறைவேற்று அதிபர்களின் நீண்டகாலப் பிரச்சினை குறித்து கல்வி அமைச்சின் செயலாளருடன் விரிவாகக் கலந்துரையாடி சாதகமானதொரு இறுதி முடிவு எட்டப்படும் என இதன்போது பதிலளித்தார்.