Top News
| அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் | | பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு | | அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு |
Oct 15, 2026

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக யாசிர் அறபாத் கடமையேற்பு

Posted on June 1, 2026 by Admin | 270 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்-உமர்)

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக பக்கீர் முகைதீன் யாசிர் அறபாத் முகைதீன் இன்று (01) உத்தியோகபூர்வமாகக் கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு வலயக் கல்வி அலுவலகத்தின் நிருவாகத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எச்.பௌஸ் தலைமையில் நடைபெற்றது.

மருதமுனை பெரியநீலாவணையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பி.எம்.யாரசீப் அறபாத் முகைதீன் அவர்கள் கல்வித்துறையில் நீண்ட நெடிய அனுபவத்தைக் கொண்ட ஒரு சிறந்த ஆளுமையாவார். தனது ஆரம்பக் கல்வியை கமு/புலவர்மணி ஷரிபுத்தீன் மகா வித்தியாலயத்திலும், இடைநிலை மற்றும் உயர் கல்வியை மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியிலும் கற்றதுடன் 2002 ஆம் ஆண்டு இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் விசேட பட்டத்தைப் (B.Sc) பெற்றார். இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவையும் (PGDE), 2007 இல் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி முதுமாணிப் பட்டத்தையும் (M.Ed) பெற்று தனது கல்வித் தகைமைகளை உயர்த்திப் பிடித்தார்.

கடந்த 1999 ஆம் ஆண்டு போட்டிப் பரீட்சை மூலம் கணித விஞ்ஞான ஆசிரியராகத் தெரிவு செய்யப்பட்டு வீரத்திடல் அல்-ஹிதாயா மகா வித்தியாலயம் மற்றும் அஸ்-ஸிராஜ் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் தனது கற்பித்தல் பணியை ஆரம்பித்தார். சம்மாந்துறை வலயக் கணினி வளநிலையத்தில் சுமார் ஆறு வருடங்கள் விரிவுரையாளராகப் பணியாற்றி பிராந்தியத்தின் தொழில்நுட்பக் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டார்.

2010 இல் நடைபெற்ற இலங்கை கல்வி நிருவாக சேவைக்கான (SLEAS) போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து 2013 முதல் கல்வி நிருவாகத் துறையில் தடம் பதித்தார். மட்டக்களப்பு மத்தி (ஏறாவூர்) வலயத்தில் ICT உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் முகாமைத்துவத்திற்கான பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும், கல்முனை வலயத்தில் முகாமைத்துவம் மற்றும் திட்டமிடலுக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் சுமார் ஆறு வருடங்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். அதன் பின்னர் அக்கரைப்பற்று கல்வி வலயத்திலும், இறுதியாக சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தில் ICT மற்றும் நிருவாகத்திற்குப் பொறுப்பான பிரதி வலயக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றி பரந்தளவிலான நிருவாக அனுபவத்தைப் பெற்றுள்ளார்.

இவர் கல்முனை வலயத்தில் பணியாற்றிய போது இந்தியாவின் புதுடெல்லியில் உள்ள புகழ்பெற்ற ‘NUEPA’ பல்கலைக்கழகத்தில் கல்வி அதிகாரிகளுக்காக நடத்தப்பட்ட திட்டமிடல் மற்றும் தர மேம்பாடு குறித்த விசேட பயிற்சி நெறியிலும் பங்கேற்றுத் தேர்ச்சி பெற்றிருந்தார் என்பது அவரது நிருவாகத் திறனுக்குச் சான்றாகும். அரச துறையில் 27 வருடங்களுக்கும் மேலான சேவைக்காலத்தைக் கொண்டுள்ள இவர் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் PGDE பாடநெறிக்கான வளவாளராகவும், முதன்மையாசிரியராகவும் நீண்டகாலமாகப் பணியாற்றி புதிய ஆசிரியர்களை உருவாக்குவதிலும் முக்கிய பங்காற்றி வருகின்றார்.

கல்வித்துறையில் இவருக்கிருக்கும் நீண்டகால நிருவாக அனுபவம், ஆளுமை மற்றும் சமூக அக்கறை என்பன அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் எதிர்கால கல்வி மற்றும் நிருவாக அபிவிருத்திகளுக்குப் புதியதொரு உத்வேகத்தை வழங்கும் எனப் பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய நிகழ்வில் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மைந்திரக்குமார், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா உட்பட பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் எனப் பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.