Top News
| அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் | | பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு | | அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு |
Oct 15, 2026

மத்திய கிழக்கின் மிகப்பெரிய புற்றுநோய் சிகிச்சை மையத்தை அமைத்து ஈரான் சாதனை

Posted on June 3, 2026 by Admin | 182 Views

மத்திய கிழக்கு பிராந்தியத்திலேயே மிகப்பெரிய மற்றும் அதிநவீன புற்றுநோய் சிகிச்சை மையத்தை (Cancer Treatment Center) அதிகாரப்பூர்வமாகத் திறந்து ஈரான் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. மருத்துவத் துறையில் ஈரானின் இந்த பிரம்மாண்ட உள்கட்டமைப்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தலைநகர் தெஹ்ரானில் அமைக்கப்பட்டுள்ள இந்த உலகத்தரம் வாய்ந்த மருத்துவ மையத்திற்காகச் சுமார் 1 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 8,000 கோடி ரூபாய்க்கும் மேல்) முதலீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து அதனை வேரடி மண்ணாக அழிப்பதற்கான சர்வதேச தரத்திலான மருத்துவக் கருவிகள் இங்கு நிறுவப்பட்டுள்ளன. அனைத்து வகையான புற்றுநோய்களுக்கும் மிக உயர்தரமான சிகிச்சைகளை ஒரே கூரையின் கீழ் வழங்குவதே இம்மையத்தின் முதன்மை நோக்கமாகும்.

புற்றுநோய் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகள் மற்றும் பிரத்யேக சிகிச்சைகளுக்காக 37 சிறப்புத் துறைகள் (Specialized Departments) இங்கு செயல்படுவதுடன் கட்டிகளைத் துல்லியமாகக் கண்டறிந்து அழிக்கக்கூடிய 11 இமேஜிங் (Imaging) மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை (Radiation Therapy) இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கீமோதெரபி சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் வசதிக்காகவும், பாதுகாப்பிற்காகவும் 96 பிரத்யேக படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளதுடன் உலகளவில் அனுபவம் வாய்ந்த 280 முன்னணி புற்றுநோய் நிபுணர்களும் (Oncologists), நூற்றுக்கணக்கான மருத்துவப் பணியாளர்களும் இங்கு முழுநேரமாகப் பணியாற்றுகின்றனர்.

இந்த பிரம்மாண்ட மையம் முழு வீச்சில் செயல்படும் போது ஆண்டுதோறும் சுமார் 2 லட்சம் புற்றுநோய் நோயாளிகளுக்கு அதிநவீன சிகிச்சை அளித்து மறுவாழ்வு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“மேற்கத்திய நாடுகளின் கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும், ஈரான் மருத்துவ மற்றும் தொழில்நுட்பத் துறையில் இவ்வளவு பெரிய பில்லியன் டாலர் சாதனையை நிகழ்த்தியிருப்பது பாராட்டுக்குரியது. இது மத்திய கிழக்கு மற்றும் அண்டை நாட்டுப் புற்றுநோய் நோயாளிகளுக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்” என மருத்துவ வல்லுநர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.