Top News
| அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் | | பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு | | அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு |
Oct 15, 2026

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று இளம் உயிர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

Posted on June 7, 2026 by Admin | 226 Views

புத்தளம், நுரைச்சோலை தலுவா முகத்துவாரப் பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை ஏற்பட்ட கொடூர கடல் நீரோட்டத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று இளம் உயிர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வார இறுதி விடுமுறையைக் கழிப்பதற்காக தலுவா முகத்துவாரப் பகுதிக்குச் சென்ற போதே இந்த எதிர்பாராத அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. அங்கு நிலவிய மோசமான காலநிலை மற்றும் கடுமையான கடல் நீரோட்டம் காரணமாக அவர்கள் எதிர்பாராத விதமாக கடலில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸார் இணைந்து நடத்திய தீவிர தேடுதலுக்குப் பிறகு மூவரின் உடல்களும் மீட்கப்பட்டு தற்போது புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்கள் புத்தளம் தில்லையடி மற்றும் உமராபாத் பகுதிகளைச் சேர்ந்த 18 மற்றும் 19 வயதுடைய இரு இளம் பெண்களும், 24 வயதுடைய வாலிபர் ஒருவரும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று இளம் உயிர்கள் இவ்வாறு துடிதுடிக்கப் பிரிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து நிலவும் மோசமான காலநிலை காரணமாக பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் ஆபத்தான நீர்நிலைகள், ஆறுகள் அல்லது கடல் பகுதிகளுக்கு நீராடச் செல்வதைத் முற்றாகத் தவிர்க்குமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவினரும் பொலிஸாரும் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.