Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

இம்முறை சாதாரண தரப் பரீட்சையில் 11,790 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ‘A’ சித்தி!

Posted on June 20, 2026 by Admin | 138 Views

2025(2026) ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி 2 இலட்சத்து 25,748 மாணவர்கள் உயர்தர வகுப்புகளில் கல்வி கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு குறித்து தெளிவுபடுத்துவதற்காக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் அனைத்துப் பாடங்களிலும் ‘A’ சித்தி பெற்ற அதிவிசிஷ்ட பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 11,790 ஆகும் எனவும் அவர் கூறியுள்ளார். அதேபோன்று, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை விஞ்ஞானம் மற்றும் கணிதம் ஆகிய முக்கிய பாடங்களில் சித்தியடைந்தவர்களின் வீதம் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இம்முறை விஞ்ஞானப் பாடத்தில் 70.1% மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன், கடந்த வருடம் இந்த சித்தி வீதம் 69.07% ஆகக் காணப்பட்டது. மேலும், கணிதப் பாடத்தைப் பொறுத்தமட்டில் இம்முறை 72.03% மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். கடந்த வருடம் கணிதப் பாடத்தின் சித்தி வீதம் 71.06% ஆகக் காணப்பட்ட நிலையில் இம்முறை அதில் சாதகமான வளர்ச்சி பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2026 ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை இவ்வருடத்தின் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். 

அதற்கான விண்ணப்பங்கள் கோரும் பணிகள் ஜூலை மாதத்தின் முதலாவது வாரத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.