Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

கற்றலில் பின்தங்கிய மாணவர்களையும் சாதனையாளர்களாக்கிய பொத்துவில் மத்திய கல்லூரி

Posted on June 23, 2026 by Admin | 252 Views

(பொத்துவில் செய்தியாளர்- ஹுதா)

பொத்துவில் மத்திய கல்லூரியின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு சாதனையை இம்முறை வெளியான 2025(2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் பறைசாற்றி நிற்கின்றன. கல்விப் புரட்சியை ஏற்படுத்தும் ஒரு உன்னத பாசறையாக இக்கல்லூரி உருவெடுத்துள்ளதை இந்த முடிவுகள் நிரூபித்துள்ளன. சென்ற வருடத்தை விடவும் இம்முறை 19% சதவீத வரலாற்றுச் சிறப்புமிக்க சித்தி அதிகரிப்பை பதிவு செய்து பொத்துவில் மத்திய கல்லூரி முன்மாதிரியாகத் திகழ்கிறது.

இந்த பிரம்மாண்டமான வெற்றியின் பின்னணியில் வெறும் கடமைக்காக அன்றி, மாணவர்களின் எதிர்காலத்திற்காகத் தங்களையே அர்ப்பணித்த ஒரு உன்னதப் படையணி செயற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இம்முறை பரீட்சை எழுதிய 80 மாணவர்களில் வெறும் 23% சதவீதத்தினரே முதலாம் தவணைப் பரீட்சையில் சித்தியடைந்திருந்த துரதிர்ஷ்டவசமான சூழல் காணப்பட்டது. எனினும் தரம் 6 இல் இப்பாடசாலையில் இணையும் போதே கற்றலில் பல்வேறு பின்னடைவுகளுடனும், சவால்களுடனும் வரும் மாணவர்களைக் கண்டு தளர்ந்துவிடாமல், அவர்களைச் செதுக்கிச் சாதனையாளர்களாக்கும் அரும்பணியை பாடசாலை நிர்வாகம் கையில் எடுத்தது.

இதற்கென கல்லூரியின் தொலைநோக்குச் சிந்தனை கொண்ட ஆற்றல்மிகு அதிபர் மதிப்பிற்குரிய எம்.எஸ்.நபீஸ் முஹம்மட் அவர்களின் வழிகாட்டலில் 14 அர்ப்பணிப்புமிக்க அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களை உள்ளடக்கிய SDF (School Dedication Force) என்னும் ஒரு சிறப்புப் படையணி உருவாக்கப்பட்டது.

இக்குழுவின் வியூகங்கள் சாதாரண கற்பித்தல் முறைகளையும் தாண்டி ஒரு தாயின் அரவணைப்பையும் தந்தையின் வழிகாட்டலையும் மாணவர்களுக்கு வழங்கியது. ஒவ்வொரு ஆசிரியருக்கும் தலா ஆறு மாணவர்கள் வீதம் பொறுப்பளிக்கப்பட்டு் தொடர்ச்சியான கண்காணிப்பும் மீள வலியுறுத்தலும் தீவிரப்படுத்தப்பட்டன. இக்குழுவின் ஆசிரியர்கள் பாடசாலை நேரத்தையும் கடந்து மாணவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று பெற்றோர்களைச் சந்தித்து ஆலோசனைகளை வழங்கி கல்வியில் ஒரு கூட்டுப் பொறுப்புணர்வை உருவாக்கினர்.

அதிபர், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் இந்த ஓயாத உழைப்பிற்கும், இரவு பகலாக அவர்கள் நடத்திய மேலதிக வகுப்புக்களுக்கும் கிடைத்த முதற்கட்டப் பரிசாக, இரண்டாம் தவணைப் பரீட்சையில் சித்தி வீதம் 46% ஆக உயர்ந்தது. ஆயினும் இந்த SDF படையணி இத்துடன் திருப்தியடைந்துவிடவில்லை. தங்களின் இலக்கை நோக்கி இன்னும் வேகமாகப் பயணித்து மாகாணமட்டப் பரீட்சையில் 56% சித்தியைப் பெற்றுத் தந்தனர். அதன் இறுதி மகுடமாக தற்போது வெளியாகியுள்ள பகிரங்க சாதாரண தரப் பரீட்சையில் 66% வீதமான மாணவர்கள் சித்தி அடைந்து உயர்தரம் கற்பதற்கான தகுதியைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இம்முறை பாடசாலையில் கற்ற அனைத்து மாணவர்களுமே எவ்விதப் பாகுபாடுமின்றி இறுதிவரை பாடசாலையின் ஊடாகவே பரீட்சைக்குத் தோற்றி இந்த உன்னத வெற்றியை ஈட்டியுள்ளனர் என்பதாகும்.

கற்றலில் பின்தங்கிய நிலையிலிருந்த மாணவர்களைக்கூட தங்களின் அயராத உழைப்பாலும், அசராத நம்பிக்கையாலும் கல்வியின் உச்சத்திற்கு அழைத்துச் சென்ற பெருமை பொத்துவில் மத்திய கல்லூரியின் அதிபர், பிரதி மற்றும் உதவி அதிபர்கள், ஒட்டுமொத்த ஆசிரியர் குலத்தையே சாரும்.