(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
அட்டாளைச்சேனை மண்ணுக்கும் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தின் நன்மதிப்புக்குரிய ஆசிரியரான எஸ்.ஓ.எம். றிஸ்மி ஒஸன் சட்டத்தரணி (Attorney-at-Law) இறுதித் தேர்வில் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளார்.
சஹாப்தீன் ஒஸன் மற்றும் ஹதீஜா உம்மா தம்பதியினரின் அருமைப்புதல்வனான இவர் , தனது ஆரம்பக் கல்வி முதல் க.பொ.த உயர்தரம் வரையான பாடசாலைப் படிப்பை அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் சிறப்பாக நிறைவு செய்து தனது எதிர்கால வெற்றிகளுக்கான அடித்தளத்தை அங்கு உறுதியாக அமைத்துக் கொண்டார்.
கல்வியில் தொடர்ச்சியான தாகமும், தேடலும் கொண்ட இவர் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் விலங்கு விஞ்ஞானத் துறையில் விசேட பட்டத்தினை (BSc Special in Animal Science) நிறைவு செய்தார். அத்துடன் தனது கல்விப் பயணத்தை நிறுத்திக்கொள்ளாமல் சட்டம் மற்றும் நீதியின் மீதிருந்த ஆர்வத்தின் காரணமாக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் இணைந்து சட்டமாணி (LLB) பட்டத்தையும் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து தனது பன்முக ஆற்றலை சமூகத்திற்கு நிரூபித்துள்ளார்.
கல்வித்துறையில் சேவையாற்றும் உயரிய நோக்கோடு, கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட வான் எலா புஹாரி வித்தியாலத்தில் தனது முதலாவது ஆசிரியர் நியமனத்தைப் பெற்று மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து தற்போது தனது சொந்த மண்ணான அட்டாளைச்சேனையில் புகழ்பெற்ற அறபா வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றி எதிர்கால சந்ததியினரை சிறந்த முறையில் வளப்படுத்தி வருகின்றார்.
கற்பிக்கும் ஆசிரியராக ஒருபுறம் சமூகத்தின் அறிவுக்கண்களைத் திறக்கும் மகத்தான பணியைச் செய்து வரும் அதேவேளை சட்டத்துறையிலும் கால்பதித்து நீதிக்காகக் குரல்கொடுக்கத் தயாராகியுள்ள றிஸ்மி ஒஸன் அவர்களின் விடாமுயற்சியும், காலநேர முகாமைத்துவமும் சிறப்புக்குரியது. ஒரு துறைசார் நிபுணத்துவத்துடன் நின்றுவிடாமல் வெவ்வேறு துறைகளில் சாதித்துக்காட்டும் அவரது அறிவார்ந்த பயணம் வியப்புக்குரியது.
தனது கடின உழைப்பாலும், தளராத நம்பிக்கையாலும் பிரதேசத்தின் கல்வித் தராதரத்தை உயர்த்தியுள்ள ஆசிரியர் எஸ்.ஓ.எம். றிஸ்மி ஒஸன் அவர்கள் கல்வி மற்றும் சட்டத்துறை ஆகிய இரண்டு தூண்களையும் பற்றிப்பிடித்து மேன்மேலும் பல வரலாற்றுச் சாதனைகளைப் படைக்க வாழ்த்துகள்.