Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

அஷ்ரப் தாஹிர் எம்பியின் நிதியிலிருந்து பாடசாலைகளுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு

Posted on August 12, 2026 by Admin | 142 Views

பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் – 2026 நிதி ஒதுக்கீட்டின் கீழ், அட்டாளைச்சேனை மற்றும் பாலமுனை பிரதேசங்களைச் சேர்ந்த பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு உபகரணங்களும் உதவிகளும் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

பொருட்கள் மற்றும் வசதிகள் கையளிக்கும் நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி. அஹமட் அப்கர் அவர்களின் தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் அண்மையில் இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயத்தின் பேண்ட் வாத்தியப் பொருட்கள் மற்றும் சீருடைகளுக்கு 5 இலட்சம் ரூபாவும், அட்டாளைச்சேனை இக்றாஹ் வித்தியாலயத்தின் புதிய நுழைவாயில் அமைப்பதற்கு 5 இலட்சம் ரூபாவும், பாலமுனை மஹாசினுல் உலூம் இஸ்லாமிக் கல்லூரிக்கு 2.5 இலட்சம் ரூபா பெறுமதியான ‘ஸ்மார்ட் போர்ட்’ (Smart Board) உபகரணமும், பாலமுனை ஸஹ்வா ஆண்கள் அரபுக் கல்லூரிக்கு 2.5 இலட்சம் ரூபா பெறுமதியான கதிரைகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேலும் ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் உட்கட்டமைப்பு மற்றும் கற்றல் சூழலை மேம்படுத்தும் நோக்கிலுமே குறித்த நிதி ஒதுக்கீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த அத்தியாவசிய தேவைகளின் நிவர்த்தியானது மாணவர்களின் கல்விசார் மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளை மேம்படுத்த பலத்த பல சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்களின் பிரத்தியேக செயலாளர் எஸ். முஹம்மட் அலி ஜின்னா, அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஐ. சிறாஜ் உள்ளிட்ட பல கல்விச் சமூகத்தினரும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக கல்வித்துறைக்கு விசேட முன்னுரிமை வழங்கப்பட்டு, பிரதேசத்தின் கல்வி நிறுவனங்களின் தேவைகள் முறையாக இனங்காணப்பட்டு தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.