Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பொதுச் சுகாதார பரிசோதகர் கைது

Posted on September 2, 2026 by Admin | 112 Views

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 51 வயதுடைய பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்று முன்தினம் (31) கல்முனைத் தலைமையகப் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்தபோதே குறித்த அதிகாரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கல்முனை நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம். சாஜித் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது மன்றில் முன்வைக்கப்பட்ட இரு தரப்பு வாதப்பிரதிவாதங்களையும் ஆராய்ந்த நீதிவான், சந்தேகநபரான பொதுச் சுகாதாரப் பரிசோதகரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கடந்த 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை குறித்த பாடசாலையில் மாணவர்களுக்கான வழமையான சுகாதாரப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது பரிசோதனையில் ஈடுபட்ட சந்தேகநபரான அதிகாரி, தமக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தமது பெற்றோரிடம் முறையிட்டுள்ளனர்.

இதனையடுத்து, பெற்றோர் ஒன்றிணைந்து கையொப்பமிட்ட முறைப்பாட்டுக் கடிதமொன்றைப் பாடசாலை அதிபர் ஊடாகக் கல்முனைத் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்திருந்தனர். மாணவர்களின் இந்த முறைப்பாட்டின் அடிப்படையில், பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளையடுத்தே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணைகளைக் கல்முனைப் பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.