Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

நிந்தவூர் கல்வி மற்றும் சமூக நிறுவனங்களுக்கு உதுமாலெப்பை எம்.பியினால் 6 இலட்சம் ரூபா நிதியுதவி

Posted on September 3, 2026 by Admin | 96 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

நிந்தவூர் பிரதேசத்தின் கல்வி மற்றும் சமூக நிறுவனங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பையின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியிலிருந்து 6 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன் கீழ், நிந்தவூர் அல்-மதீனா வித்தியாலயத்தில் நீண்டகாலத் தேவையாகக் காணப்பட்ட பாடசாலைக் கட்டடப் புனரமைப்புப் பணிகளைத் துரிதப்படுத்துவதற்காக 4 இலட்சம் ரூபா (400,000) நிதி வழங்கப்பட்டதுடன் பிரதேச மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைச் சுமுகமான முறையில் முன்னெடுக்கும் வகையில் இத்திட்டம் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதேவேளை, பிரதேசத்தில் மார்க்கப் பணிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வரும் நிந்தவூர் கதீப் பேஷ் இமாம் சம்மேளனத்தின் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கிலும் ஒலிபெருக்கித் தொகுதிகள் (Sound systems) மற்றும் கதிரைகள் கொள்வனவு செய்வதற்காக 2 இலட்சம் ரூபா (200,000) நிதியும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிதியொதுக்கீட்டின் ஊடாகப் புனரமைக்கப்பட்ட அல்-மதீனா வித்தியாலய கட்டடத்தைப் பார்வையிடும் நிகழ்வும், கொள்வனவு செய்யப்பட்ட உபகரணங்களைப் பயனாளிகளிடம் கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வும் நிந்தவூர் பிரதேச செயலகத்தில் நேற்று அண்மையில் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப், பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் மு.சப்றி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி.சமால்தீன், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளரும் ஓய்வுபெற்ற அதிபருமான எம்.ஏ.அன்சார், பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ.எம்.றசீன், பாராளுமன்ற உறுப்பினரின் நிந்தவூர் பிரதேச இணைப்பாளரும் பொலன்னறுவை புளதிசிபுற கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் சட்டத்தரணி ஏ.பி.அப்துல் கபூர் மற்றும் நிந்தவூர் கதீப் பேஸ் இமாம் சம்மேளன அமைப்பின் தலைவர் அஷ்ஷேய்க் எம்.ஏ.சி.எம்.அப்துர் ரஹ்மான் (ஸஃதி), அல்-மதீனா வித்தியாலயத்தின் அதிபர் எம்.எச்.எம்.ஏ.ராபிஹு, உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.