புத்தல – கதிர்காமம் பிரதான வீதியில் யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றின் மீது காட்டு யானை மேற்கொண்ட தாக்குதலில் பஸ் வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் பல பயணிகள் காயமடைந்துள்ளனர்.
யால வனப்பகுதியை அண்மித்த பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. புனித யாத்திரைக்காக சென்றவர்களை ஏற்றிச் சென்ற குறித்த பஸ் மீது, வனப்பகுதியில் இருந்து திடீரென வீதிக்கு வந்த காட்டு யானை எதிர்பாராத விதமாக தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
யானையின் தாக்குதலினால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், வீதியோரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் காயமடைந்த யாத்திரிகர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வனப்பகுதியை ஊடறுத்துச் செல்லும் வீதிகளில் பயணிக்கும் வாகனச் சாரதிகள் மற்றும் பயணிகள் வனவிலங்குகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

