(அக்கரைப்பற்று செய்தியாளர்- இஸ்ஸத்)
2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அக்கரைப்பற்று கல்வி வலயம் வரலாற்றுச் சாதனையொன்றைப் பதிவு செய்துள்ளது.
இம்முறை வலயக் மட்டத்தில் 332 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதுடன், 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களின் வீதம் 87.1 சதவீதமாகப் பதிவாகியுள்ளமை கல்விச் சமூகத்தினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த அபரிமிதமான வெற்றியைக் கொண்டாடும் வகையில் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் பி.எம்.வை. அரபாத் அவர்கள் இச்சாதனைக்கு வித்திட்ட அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். இது ஒரு சாதாரண வெற்றியல்ல என்றும் அனைவரதும் கூட்டு முயற்சிக்கும் அர்ப்பணிப்புக்கும் கிடைத்த மாபெரும் பரிசு எனவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களின் இந்த மகத்தான வெற்றிக்குப் பின்னால் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் அளப்பரிய தியாகங்கள் இணைந்துள்ளன. போட்டித்தன்மை மிக்க இப்பரீட்சைக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் நோக்கில் முறையான திட்டமிடல்களுடன் பாடசாலைகளை வழிநடத்திய அதிபர்களின் சிறப்பான முகாமைத்துவம் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும். அதேபோன்று வகுப்பறைகளில் ஒவ்வொரு மாணவன் மீதும் தனிப்பட்ட கவனம் செலுத்தி, அவர்களின் கற்றல் அடைவு மட்டங்களை உயர்த்துவதற்காக சோர்வின்றி அரும்பாடுபட்ட ஆசிரியப் பெருந்தகைகளின் சேவை போற்றுதலுக்குரியது.
பிள்ளைகளின் கல்விக்காகத் தமது நேரத்தையும் உழைப்பையும் அர்ப்பணித்து, அவர்களுக்கு உற்ற துணையாக நின்று சிறந்த கற்றல் சூழலை உருவாக்கிக் கொடுத்த பெற்றோர்களின் பங்களிப்பு இந்த வெற்றியைச் சாத்தியமாக்கியுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, மாணவர்களின் கடின உழைப்பும் விடாமுயற்சியுமே அவர்களைச் சாதனையாளர்களாக உயர்த்தியுள்ளன. விளையாட்டுப் பருவத்திலும் தமது இலக்கினை நோக்கி அவர்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான பயிற்சிகளும், கல்வி மீதான தாகமுமே இன்று வரலாற்றுச் சாதனையாக உருவெடுத்துள்ளது.
இம்மாபெரும் சாதனைக்குக் களம் அமைத்துக் கொடுத்து, இரவு பகல் பாராது அரும்பணியாற்றிய அக்கரைப்பற்று வலயத்தின் முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எம்றஹ்மத்துல்லாஹ், ஆரம்பக் கல்விப் பிரிவிற்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி மயூரன், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், ஆரம்பப் பிரிவு ஆசிரிய ஆலோசகர்களில் ஒருவரான றிம்சான் மற்றும் பாடசாலை மேம்பாட்டு அதிகாரிகள் அனைவரதும் அர்ப்பணிப்புடனான சேவைகளும், தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் வழிகாட்டல்களும் இந்த வெற்றியின் முக்கிய தூண்களாக அமைந்துள்ளன.
கூட்டு முயற்சியால் சாத்தியமாக்கப்பட்ட அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் இந்த வெற்றிப் பயணம் எதிர்காலத்திலும் தொடர வேண்டும் எனப் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.