Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

பாலமுனை அல் ஹிதாயா மகளிர் கல்லூரியில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சார்த்திகளை கௌரவிக்கும் விசேட நிகழ்வு

Posted on September 8, 2026 by Admin | 111 Views

(பாலமுனை செய்தியாளர்)

பாலமுனை அல் ஹிதாயா மகளிர் கல்லூரியில் இவ்வருடம் (2026) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவிகளைப் பாராட்டி கௌரவிக்கும் விசேட நிகழ்வொன்று நேற்று (07) பாடசாலை அதிபர் எம்.ரி.எம். சியாத் தலைமையில் நடைபெற்றது.

இம்முறை இப்பாடசாலையிலிருந்து 85 மாணவிகள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். இவர்களில் 79 மாணவிகள் 70 இற்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பெற்று 93 சதவீத சித்தியைப் பதிவு செய்துள்ளனர். அத்துடன் 12 மாணவிகள் மாவட்ட வெட்டுப்புள்ளிக்கு (District Cut-off) மேல் புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளமை சிறப்பம்சமாகும்.

இந்நிகழ்வில் பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவிகளுக்கும் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு பாடசாலை வாத்தியக் குழுவினரின் விசேட பேண்ட் வாத்திய மரியாதையுடன் ஊர்வலமாக பாடசாலை வளாகத்தினுள் அழைத்து வரப்பட்டனர். இந்த அமோக வரவேற்பு மாணவிகள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது.

இம்மாணவிகளின் சிறந்த பெறுபேற்றிற்காகவும் கல்வி வளர்ச்சிக்காகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றிய ஆரம்பப் பிரிவுக்குப் பொறுப்பான வலயத் தலைவர் ஆசிரியர் எம்.ஏ.எம். மாஹிர், உதவி அதிபர் எம்.பி. பர்ஸானா மற்றும் தரம் 1 முதல் தரம் 5 வரை கற்பித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் அதிபர் தனது விசேட பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

குறிப்பாக, மாணவிகளின் கல்வி முன்னேற்றத்திற்காக அல்லும் பகலும் அயராது உழைத்த வழிகாட்டி ஆசிரியர்களான ஏ.எல். அம்றுல்லா, திருமதி. எம்.எப். முபாறக், வை.எல். சியானா ஆகியோரின் அளப்பரிய சேவையைக் கௌரவிக்கும் வகையில் அதிபர் எம்.ரி.எம். சியாத் தனது சொந்த நிதியிலிருந்து அவர்களுக்கு விசேட நினைவுச் சின்னங்களை வழங்கி கௌரவித்தமை அனைவரினதும் கவனத்தை ஈர்த்தது.