Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

இலங்கையில் சிறுவர்களை வேகமாக தாக்கும் புற்றுநோய்கள்

Posted on September 9, 2026 by Admin | 159 Views

இலங்கையில் சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினரிடையே புற்றுநோய் பாதிப்பு கணிசமாக பதிவாகி வருவதாகவும் நாட்டில் பிறந்தது முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்களில் வருடாந்தம் சுமார் 900 முதல் 1,000 வரையிலான புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும் தேசிய புற்றுநோய் தடுப்பு வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது.

தேசிய புற்றுநோய் தடுப்பு வேலைத்திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் டொக்டர் சுராஜ் பெரேரா இந்தத் தகவலை வெளியிட்டார். கொழும்பில் உள்ள சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று (09) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சிறுவர்களைத் தாக்கும் புற்றுநோய்களில் குறிப்பிட்ட சில வகைகள் இலங்கையில் அதிகளவில் கண்டறியப்படுவதாக வைத்தியர் சுட்டிக்காட்டினார். அவையாவன: ரத்தப் புற்றுநோய் (Leukemia), நிணநீர்ச் சுரப்பிப் புற்றுநோய் (Lymphoma), மூளைப் புற்றுநோய், எலும்புப் புற்றுநோய், கண் புற்றுநோய் தாக்கம் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

சிறுவர்களிடையே ஏற்படும் அசாதாரண காய்ச்சல், தொடர்ச்சியான சோர்வு, உடலில் தோன்றும் கட்டிகள் அல்லது வீக்கங்கள், திடீர் எடை குறைவு மற்றும் எலும்பு வலிகள் தொடர்பில் பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.

எந்தவொரு புற்றுநோயாக இருந்தாலும், அதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய மருத்துவ சிகிச்சைகளை வழங்குவதன் மூலம் அதனை முற்றாகக் குணப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகம் என வைத்தியர் சுராஜ் பெரேரா உறுதியளித்தார். இதற்கான அதிநவீன சிகிச்சைகள் மற்றும் மருத்துவ வசதிகள் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை உள்ளிட்ட பிரதான அரச வைத்தியசாலைகளில் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிறுவர்கள் மற்றும் பருவவயதினருக்கு ஏற்படும் புற்றுநோய்கள், அதற்கான நவீன சிகிச்சைகள் மற்றும் உளவியல் ஆதரவு குறித்து சமூக மட்டத்தில் விரிவான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், உலகம் முழுவதும் செப்டெம்பர் மாதம் “சர்வதேச சிறுவர் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக” (Childhood Cancer Awareness Month) அனுஷ்டிக்கப்படுகிறது.

“எதிர்கால தேசத்தின் சொத்துக்களான சிறுவர்களை புற்றுநோயின் பிடியிலிருந்து பாதுகாக்க, ஆரம்பகால நோயறிதலும் துரித சிகிச்சையுமே பிரதான ஆயுதமாகும். இதற்கு சமூகம் என்ற ரீதியில் அனைவரும் ஒன்றிணைந்து விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும்”