Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

எந்தவொரு சமூகமும் தமது கலாசார அடையாளத்துக்காக அச்சப்படத் தேவையில்லை என உலமா சபையிடம் ஜனாதிபதி உறுதி

Posted on September 10, 2026 by Admin | 97 Views

எந்தவொரு சமூகமும் தமது கலாசார அடையாளம் காரணமாக சமூகத்தில் பாதுகாப்பற்ற தன்மையையோ அல்லது அச்சத்தையோ எதிர்நோக்காத ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு தற்போதைய அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின் போது, கடந்த இரண்டு வருடங்களாக நாட்டில் எந்தவொரு இனவாத மோதல்களுக்கும் இடமளிக்காது, அனைத்து மக்களுக்கும் இடையில் சகவாழ்வு, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்த வேலைத்திட்டங்களுக்கு ஜம்இய்யத்துல் உலமா சபை தமது பாராட்டுகளைத் தெரிவித்தது. அத்துடன், நாட்டின் எதிர்கால சந்ததியினரைச் சீரழித்து வரும் போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்காக அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள விசேட வேலைத்திட்டங்களுக்கும் சபை வரவேற்புத் தெரிவித்துள்ளது.

மேலும், முஸ்லிம் சமூகம் தமது சமய மற்றும் கலாசார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் தற்போதும் எதிர்கொண்டுள்ள பல்வேறு சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்தும் இச்சந்திப்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, கலாசார மற்றும் சமய அடையாளங்கள் காரணமாக எந்தவொரு பிரஜையும் அச்சமின்றி வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்கு எனவும், அதற்கான முழுமையான அர்ப்பணிப்புடன் அரசாங்கம் செயற்படும் எனவும் உறுதியளித்தார்.