Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை

Posted on September 11, 2026 by Admin | 95 Views

மட்டக்களப்பு புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியக அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அரச அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அம்பிட்டிய சுமணரத்ன தேரர், கடும் நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அண்ணாதுரை தஷ்ஷினி முன்னிலையில் இந்த வழக்கு இன்று (11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, தேரரை தலா இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

பிணை வழங்குவதற்காக நீதவானால் பல கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதன்படி, இனிவரும் காலங்களில் எந்தவொரு அரச திணைக்களங்களுக்கும் சென்று இவ்வாறான அச்சுறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது, வழக்கின் சாட்சியாளர்களை அச்சுறுத்தக் கூடாது மற்றும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய தலைமறைவாகியுள்ள ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கு பொலிஸாருக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் ஆகிய நிபந்தனைகள் தேரருக்கு விதிக்கப்பட்டன.

இந்த நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை மீறினாலும் பிணை உடனடியாக இரத்துச் செய்யப்பட்டு, வழக்கு நிறைவடையும் வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்படுவார் எனவும் நீதவானால் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கடந்த ஓகஸ்ட் 31 ஆம் திகதி மட்டக்களப்பு, சென்ட்ரல் வீதியில் அமைந்துள்ள புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியக அலுவலகத்திற்குள் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் உள்ளிட்ட ஐவர் அத்துமீறி நுழைந்து கடமைக்கு இடையூறு விளைவித்ததாக, பாதிக்கப்பட்ட அதிகாரிகளால் மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து, கடந்த திங்கட்கிழமை (07) பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் அளிக்கச் சென்ற தேரர், பெரும் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் வை. விஜயராஜா தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டு, இன்று (11) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை, இச்சம்பவத்தின் போது தேரருடன் சென்று பின்னர் தலைமறைவாகியிருந்த மேலும் இருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். குறித்த இருவரையும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், வழக்கின் அடுத்தகட்ட விசாரணைகளை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.