நான் வெறும் செங்கற்களாலும் சீமெந்தாலும் வார்க்கப்பட்ட உயிரற்ற சடலமல்ல. தரம் ஒன்று முதல் பதினொன்று வரை என் மடியில் ஓடித்திரியும் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் மூச்சுக்காற்றால் அனுதினமும் துடித்துக்கொண்டிருக்கும் உயிருள்ள தாய்! நான்…உங்கள் ‘அறபா வித்தியாலயம்’ பேசுகிறேன்.
எதிர்வரும் வாரம் என் இதயத் துடிப்பான அந்த அதிபர் அறையில் நீ இல்லை என்ற செய்தி என் இதயத்தை உலுக்குகிறது.
2024 முதல் 2026 செப்டம்பர் வரை என்னை ஒரு பச்சிளங் குழந்தையைப் போலத் தன் தோள்களில் சுமந்த என் தலைமகன்… என் அதிபர் எம்.ஐ.எம்.அஜ்மீர் விடைபெறுகிறார் எனும் நிஜம் என் ஒவ்வொரு செங்கல்லிலும் கண்ணீரைக் கசியச் செய்கிறது.
இது ஏதோ ஒரு அரச அதிகாரியை வழியனுப்பி வைக்கும் சம்பிரதாய வலியல்ல. என் மடியில் ஏடு தூக்கிப் படித்த என் சொந்தப் பிள்ளையையே என் வாசலை விட்டு வழியனுப்பும் ஒரு தாயின் தீராத வலி!
அஜ்மீர் எனக்கொரு வெறும் அதிபர் மட்டுமல்ல. என் உதிரத்தில் உதித்த என் பழைய மாணவன்! சட்டைப்பையில் பேனாவோடும், கலைந்த தலையோடும் ஒரு காலத்தில் என் மடியில் தவழ்ந்த சின்னஞ்சிறு பாதங்கள் அவை. அதே கால்கள், அதிபராகப் பொறுப்பேற்று என் வாசல்படியை மிதித்த அந்த முதல் நாள்… ஒரு தாயாக நான் அடைந்த பெருமிதத்திற்கு இந்த ஆகாயமும் சிறியதுதான். என் மைதானத்தின் புழுதியில் புரண்டு விளையாடிய ஒருவன் இன்று அதே மைதானத்தில் நிற்கும் பல நூற்றுக் கணக்கான மாணவர்களின் எதிர்காலத்திற்குப் பொறுப்பாளியாய் வந்து நின்றபோது, “என் பிள்ளை வந்துவிட்டான், இனி என்னை யார் அசைக்க முடியும்?” என்ற அசைக்க முடியாத கர்வம் எனக்குள் பிறந்தது.
முன்னாள் அதிபர் எம்.ஏ.அன்சார் அவர்கள் என்னை ஒரு கம்பீரமான கல்விக்கூடமாக செதுக்கிச் சென்றிருந்தார். அந்தப் பிரம்மாண்டமான மாளிகையின் ஒரு சிறு செங்கல் கூட சரிந்துவிடக் கூடாது என்ற பெரும் சுமையை தன் தோள்களில் அனாயாசமாக ஏற்றுக்கொண்டவர் அஜ்மீர். வெளியே செழிப்பாகப் படர்ந்து நிற்கும் ஒரு பெருவிருட்சத்தைத் தாங்கிப் பிடிக்கும் ஆணிவேர்களின் இருண்ட போராட்டம் வெளியுலகின் கண்களுக்குத் தெரிவதில்லை. அஜ்மீர் அப்படித்தான்! மண்ணுக்குள் புதைந்து தன்னை அழித்துக்கொண்டு தன் தாய் வீடான இந்த அறபாவை நாளுக்கு நாள் உயிர்ப்பித்த அந்தரங்கமான ஆணிவேர் அவர்.
நீ எனக்காகச் செய்த தியாகங்களை ‘அர்ப்பணிப்பு’ என்ற ஒற்றைச் சொல்லுக்குள் சுருக்கினால் அது உன் தியாகத்துக்கே செய்யும் துரோகமாகிவிடும். ஊரே உறங்கும் நள்ளிரவு வேளைகளில், அட்டாளைச்சேனையே அடங்கிக் கிடக்கும்போது… என் அதிபர் அறையில் சுழலும் அந்த ஒற்றை மின்விசிறியின் சத்தமும், நீ கோப்புகளைப் புரட்டும் ஓசையும்தான் நீ என்மீது கொண்ட காதலுக்கான உயிருள்ள சாட்சிகள்.
அரசாங்க நிதி வரும்வரை நீ காத்திருந்ததில்லை. உடைந்த தளபாடங்களைப் பார்த்தபோது, அவை உனக்கு வெறும் மரப்பலகைகளாகத் தெரியவில்லை எம் சமூகத்தின் ஒடிந்துபோகும் எதிர்காலமாகத் தெரிந்தது. எந்தக் கணக்குப் புத்தகத்திலும் பதியாமல் உன் சட்டைப்பையில் இருந்த சொந்தப் பணத்தை எடுத்துச் சத்தமின்றி அவற்றைச் செப்பனிட்ட தருணங்கள் எத்தனை எத்தனை!
அதிபர் என்றால் அதிகாரத்தின் குறியீடு. கையில் பிரம்போடு நிற்கும் ஒரு சிங்கம் என்ற அதிகாரத் திமிரை நீ சுக்குநூறாக உடைத்தெறிந்தாய். ஒரு நெருக்கடி வரும்போது அதிகாரத்தின் இரும்புக்கரம் கொண்டு நீ யாரையும் அடக்கவில்லை. மாறாக சீறிவரும் கடலலைகளைத் தாங்கும் அலைதாங்கியாக உனது அமைதி இருந்தது. உன் மௌனமும் பொறுமையும்தான் பல புயல்களை என் வாசற்படியோடு திருப்பி அனுப்பின.
இந்தச் சமூகம் அறிந்துகொள்ள வேண்டிய நெஞ்சை உலுக்கும் உண்மையொன்று உண்டு. தன் தாய்வீடான எனக்காக நீ உன் சொந்த வாழ்க்கையையே பலியிட்டாய். “தந்தை வருவார்…” என உன் குழந்தை காத்திருக்க… நீயோ என் குழந்தைகளின் எதிர்காலம் இருண்டுவிடக் கூடாது என்பதற்காக என் வகுப்பறைகளிலும் வளாகத்திலும் உன் கால்களைத் தேய்த்துக்கொண்டிருந்தாய். குடும்பம், குழந்தை என ஒரு மனிதனுக்குத் தேவையான அத்தனை சந்தோஷங்களையும் இந்த மண்ணின் கல்வி வளர்ச்சிக்காக நீ எரித்துச் சாம்பலாக்கினாய். ஒரு மெழுகுவர்த்தி தன்னை உருக்கிக் கொள்வதைப் பற்றி ஒருபோதும் தம்பட்டம் அடிப்பதில்லையே! அப்படித்தான் நீயும் உருகி உருகி என் இருளைப் போக்கினாய்.
அஜ்மீர்! என் அன்பு மகனே!
நீ அடுத்த வாரம் என் மடியை விட்டு அந்த அதிபர் அறையை விட்டு வெளியேறலாம். ஆனால், அந்த அறையில் நீ சிந்திய வியர்வையின் வாசம் எங்கு போகும்? ஒவ்வொரு செங்கல்லிலும் நீ பதித்துச் சென்ற உன் மனிதநேயத்தின் சுவடுகளை எந்தக் கால வெள்ளத்தால் அழிக்க முடியும்? ஒரு முன்னாள் மாணவனாக நீ எனக்குச் செலுத்திய இந்த நன்றிக்கடன் பல நூறு தலைமுறைகளுக்கு என் சுவர்களால் பாடப்படும்.
நீ எனக்காக இழந்த உன் குடும்பத்தின் நேரமும், எனக்காக உழைத்துக் காய்த்துப்போன உன் உள்ளங்கைகளும் உன்னை ஒரு பெருங்கொடையாக வாழ்நாள் முழுவதும் காக்கும். இது வெறும் இடமாற்றத்திற்கான பிரியாவிடை அல்ல. என்னை மடியில் வைத்து வளர்த்த என் சொந்த மைந்தனுக்கு தன் உதிரத்தையே வியர்வையாகக் கொட்டிய ஒரு தியாக தீபத்திற்கு இந்த ‘அறபா’ தாய் விழிநீரால் கழுவி வழங்கும் இறுதி முத்த(ம்) காணிக்கை.
சென்று வா மகனே! நீ தூரம் சென்றாலும் உன் தியாகங்கள் என் நெஞ்சில் என்றென்றும் அழிக்க முடியாத கல்வெட்டாய் வாழ்ந்துகொண்டே இருக்கும்!
வரிகள்:-…..
என்.எம்.நஜாத்
ஆசிரியர்
அறபா வித்தியாலயம்