(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்வி, கலாசார மற்றும் நலன்புரிப் பிரிவின் ஏற்பாட்டில், 2026ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் (9A) மற்றும் உயர்தரப் (3A) பரீட்சைகளில் அதிவிசேட சித்திபெற்று சாதனை படைத்த மாணவ, மாணவிகளைக் கௌரவிக்கும் “கல்விக்கு உரமூட்டும் நிகழ்வு” மக்கள் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.எஸ்.எம். ஜஃபர் தலைமையில் அட்டாளைச்சேனை பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் கலாசார மண்டபத்தில், மிக விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சாதனை மாணவர்களைக் கௌரவித்தார்.
அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் மற்றும் பொத்துவில் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வித் திறனைப் போற்றும் வகையிலும், அவர்களின் எதிர்கால உயர் கல்விச் செயற்பாடுகளை மேலும் ஊக்குவிக்கும் நோக்கிலும் இந்த மாபெரும் கௌரவிப்பு விழா அமைந்திருந்தது.
பிரதேசத்தின் கல்வித் துறைக்கு வலுச்சேர்க்கும் வகையிலான இந்த விழாவில் கௌரவிக்கப்பட்ட சாதனை மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் எனப் பலரும் பெருமளவில் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.









