இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் நீங்காத இடம்பிடித்தவரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகருமான பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃபின் 26 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டமுதுமாணி ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று (16) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
இவ்விசேட நிகழ்வில் பிரதம அதிதியாக இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் விசேட அழைப்பின் பேரில் கலந்துகொண்டதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள், கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
கிழக்கின் எழுச்சி நாயகனாகவும், தேசிய அரசியலில் முஸ்லிம் சமூகத்திற்கான தனித்துவமானதொரு அரசியல் அடையாளத்தை உருவாக்கியவராகவும் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் திகழ்கின்றார். சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காக பாராளுமன்றத்திலும் வெளியிலும் ஓங்கி ஒலித்த அவரது குரல், இலங்கை அரசியலில் பல திருப்புமுனைகளை ஏற்படுத்தியது.
கடந்த 2000ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி அரநாயக்க பகுதியில் இடம்பெற்ற பாரிய ஹெலிகொப்டர் விபத்தில் தேசத்தை மீளாத் துயரில் ஆழ்த்தி அவர் விடைபெற்றாலும், துறைமுகங்கள், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு அமைச்சராக அவர் ஆற்றிய அளப்பரிய சேவைகளும், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அவர் விட்டுச்சென்ற கல்விச் சொத்துக்களும் இன்றும் மக்கள் மனங்களில் பசுமையாக நிறைந்துள்ளன.
இன்றைய நினைவேந்தல் நிகழ்வில் அன்னாரின் மறுமை வாழ்வுக்கான விசேட துஆப் பிரார்த்தனைகள் இடம்பெறவுள்ளதுடன், அவரது அரசியல் பயணம், சமூகப் பங்களிப்புகள் மற்றும் எதிர்காலச் சவால்கள் குறித்த சிறப்புரைகளும் இடம்பெறவுள்ளன.





