Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

அட்டாளைச்சேனை தவிசாளர் உவைஸ் தலைமையில் நடைபெற்ற நடமாடும் சேவை

Posted on September 17, 2026 by Admin | 87 Views

‘வளமான நாடு – அழகான வாழ்வு’ எனும் தொனிப்பொருளின் கீழான ‘புத்துயிர்க்கும் புதுநகரம்’ உள்ளூராட்சி வார நிகழ்வுகளும், பொதுமக்களுக்கான விசேட நடமாடும் சேவையும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கடந்த திங்கட்கிழமை (14) இடம்பெற்றன.

அட்டாளைச்சேனை பொது நூலக வளாகத்தில் பிரதேச சபை தவிசாளர் ஏ.எஸ். உவைஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார்.

பொதுமக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் பிரதான நோக்கோடு இந்த விசேட நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதற்காகப் பல்துறை அரச நிறுவனங்கள் ஒரே கூரையின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டு, மக்களின் தேவைகள் துரித கதியில் நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டன.

இந்த நடமாடும் சேவையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகம், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, வனஜீவராசிகள் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை, மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் ஆட்பதிவுத் திணைக்களம் உள்ளிட்ட பிரதான அரச நிறுவனங்கள் சேவைகளை வழங்கின.

அத்துடன் சமூக சேவைப் பிரிவு, பிறப்பு – இறப்பு மற்றும் திருமணப் பதிவாளர் பிரிவு, ஓய்வூதியப் பிரிவு, சிறுவர் விவகாரப் பிரிவு, அரசாங்க கால்நடை வைத்திய அலுவலகம், இலங்கை மின்சார சபை, கல்முனை மாவட்ட மீன்பிடி அலுவலகம், தேசிய நீர் வழங்கல் வடிகால் சபை, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் பொலிஸ் பிரிவு உள்ளிட்ட ஏராளமான அரச திணைக்களங்களும் பங்கேற்றுத் தமது சேவைகளை மக்களுக்கு நேரில் வழங்கி வைத்தன.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எப். அஹமட் அப்கர், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளரும் ஓய்வுநிலை அதிபருமான எம்.ஏ.அன்சார், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் எம். நிஹால், முன்னாள் உதவித் தவிசாளர் எப். நஜீத் உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.சி. நியாஸ், ஏ.எல்.பாயிஸ்(ADE), எம்.எல். றினாஸ், எஸ்.எம்.றியாஸ், ஐ.எல். அஸ்வர் மற்றும் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சாமர ஜெயதிலக, பிரதேச சபை உறுப்பினர்கள், அட்டாளைச்சேனை பிரதேச செயலகக் கணக்காளர் எம்.எப். பர்ஹான் உள்ளிட்ட திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.