Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

அட்டாளைச்சேனை வீரர்களின் சாதனையில் மகுடம் சூடிய சபரகமுவ பல்கலைக்கழகம்

Posted on September 17, 2026 by Admin | 169 Views

அகில இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான (Inter-University Games) தேசிய கபடிச் சுற்றுப்போட்டியில் சபரகமுவ பல்கலைக்கழக அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த இளம் வீரர்களான ஏ. நிபாஸ்தீன் மற்றும் என். அல்தாப் ஆகியோர் முக்கிய பங்காற்றி ஒட்டுமொத்த ஊருக்கும் பெருமை தேடித்தந்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் 15 பல்கலைக்கழக அணிகள் பங்கேற்ற இச்சுற்றுப்போட்டியின் ஆடவர் இறுதிப் போட்டி மிக விறுவிறுப்பாக நடைபெற்றது. பலம் வாய்ந்த ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக அணியை எதிர்த்து இறுதிப் போட்டியில் களமிறங்கிய சபரகமுவ பல்கலைக்கழக அணி 37–24 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றிபெற்று தேசிய சாம்பியன் மகுடத்தைச் சூடிக்கொண்டது. இந்த வெற்றியில் சபரகமுவ அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய அட்டாளைச்சேனை வீரர்களின் அர்ப்பணிப்பான ஆட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

தேசிய மட்டத்தில் இன்று சாம்பியன்களாக மிளிரும் நிபாஸ்தீன் மற்றும் அல்தாப் ஆகியோரின் விளையாட்டுப் பயணம் பல சவால்களைக் கடந்து வந்ததாகும். 2019ஆம் ஆண்டு அட்டாளைச்சேனையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத காலகட்டத்தில் ஒரு சிறிய விளையாட்டுக் கழகத்தின் மூலமே இவர்கள் தமது கபடிப் பயணத்தை ஆரம்பித்தனர்.

ஆரம்பத்தில் முறையான பயிற்சிக் கட்டமைப்புகள் இல்லாதிருந்த போதிலும் விளையாட்டின் மீதிருந்த அசாத்திய ஈடுபாட்டாலும் கடின உழைப்பாலும் பாடசாலை மட்டம் 17 மற்றும் 20 வயதுக்குட்பட்ட பிரிவுகள், மாகாண மற்றும் தேசிய மட்டப் போட்டிகளில் தொடர்ச்சியாகத் தடம் பதித்து முன்னேறினர்.

தமது உயர்தரக் கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்து சபரகமுவ பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான இவர்கள், அங்குள்ள பல்கலைக்கழக கபடி அணியிலும் இணைந்து தீவிர பயிற்சிகளை மேற்கொண்டதன் விளைவாகவே இன்று தேசிய அரங்கில் இந்த உச்ச சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.

பல்வேறு எல்லைகளையும் சவால்களையும் தாண்டி தேசிய அரங்கில் முத்திரை பதித்து அட்டாளைச்சேனை மண்ணைத் தலைநிமிரச் செய்துள்ள நிபாஸ்தீன் மற்றும் அல்தாப் ஆகியோரின் இந்தச் சாதனைப் பயணத்திற்கு பிரதேச மக்கள், விளையாட்டு ஆர்வலர்கள் எனப் பலரும் தமது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.