அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான வலய மட்ட சிறுவர் மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிகளில் ஒலுவில் அல்-மதீனா வித்தியாலயத்தைச் சேர்ந்த 24 மாணவர்கள் பதக்கங்களை வென்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
அக்கரைப்பற்று அஷ்-ஷிறாஜ் மகா வித்தியாலயத்தில் இன்று (20) நடைபெற்ற இவ்விளையாட்டுப் போட்டிகளின் பரிசளிப்பு நிகழ்வில் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் பி.எம்.வை. அறபாத் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கான வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் அதிதிகளாக உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல். பாயிஸ், பொத்துவில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் கே.ஹம்ஸா மற்றும் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் விரிவுரையாளர் எம்.எம்.அஸ்மி உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
வலய மட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்தி பாடசாலையின் நற்பெயரை மிளிரச் செய்த குறித்த மாணவர்களுக்கும், அவர்களை அர்ப்பணிப்புடன் பயிற்றுவித்த ஆசிரியர்களான ஏ.எல்.எம். றிஸ்கான், எஸ்.எப். சஹானா, ஜே.என். சுஹாரா, ஏ.எல்.எப். சபீயா மற்றும் ஐ. ஹனான் ரஸாட் ஆகியோருக்கும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைச் சமூகத்தினர் தமது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.
