(பி.முஹம்மட் ஆரிப்)
அக்கரைப்பற்று முனவ்வறா கனிஷ்ட கல்லூரியின் புதிய அதிபராக இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்த (SLPS-III) திருமதி ஏ.எல். சதீலா உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இப்பாடசாலையில் நீண்டகாலமாக அதிபராகக் கடமையாற்றி வந்த எம்.ஐ.எம். உவைஸ் (SLPS-I) அண்மையில் ஓய்வுபெற்றார். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே கல்லூரியின் பிரதியதிபராகச் செயற்பட்டு வந்த ஏ.எல். சதீலா புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்வித்துறையில் விரிவான அனுபவமிக்கவரான இவர் றஹ்மானியா வித்தியாலயத்தில் சுமார் 17 வருடங்கள் ஆசிரியராகவும் கல்வி நிர்வாகியாகவும் பணியாற்றியுள்ளார். அக்காலப்பகுதியில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், பாடசாலையின் ஏனைய செயற்பாடுகளுக்கும் இவர் காத்திரமான பங்களிப்பினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதிய அதிபரின் கடமையேற்பு நிகழ்வில் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் பி.எம்.வை. அறபாத் முஹைடீன், பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல். அப்துல் மஜீத், கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி. எம். மயூரன், EPSI இணைப்பாளர் எம்.ஐ.எம். ஹனீபா இஸ்மாயில் மற்றும் முனவ்வறா கல்லூரியின் பிரதியதிபர் எம்.ஆர். தாஹா உள்ளிட்ட கல்வி அதிகாரிகளும், பாடசாலை நிர்வாகத்தினரும் கலந்துகொண்டு தமது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
புதிய அதிபரின் வினைத்திறனான முகாமைத்துவத்தினூடாக முனவ்வறா கனிஷ்ட கல்லூரி, கல்வி மற்றும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் மேலும் பல முன்னேற்றங்களையும் சாதனைகளையும் பதிவுசெய்யும் எனப் பாடசாலைச் சமூகத்தினர் பெரும் எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளனர்.
