Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

பரபரப்பான உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு

Posted on September 22, 2026 by Admin | 84 Views

நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் 15 பிரதிவாதிகளை குற்றவாளிகளாகக் கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இன்று (22) தீர்ப்பளித்துள்ளதுடன் ஏனைய 9 பிரதிவாதிகளையும் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்ஸங்க ஆகிய மூவரடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தினாலேயே இந்த முக்கிய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்குதலுக்குச் சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட 23,270-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 15 பேருக்குமான தண்டனை விபரங்கள் இன்று அறிவிக்கப்படவுள்ளன.

இந்த வழக்கு விசாரணைகளில் 2,309 சாட்சிகள் நெறிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கடந்த ஓகஸ்ட் 24ஆம் திகதி சாட்சி விசாரணைகள் முழுமையாக நிறைவடைந்திருந்தன.

தீர்ப்பு அறிவிக்கப்படுவதை முன்னிட்டு, எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாத வண்ணம் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி விசேட பொலிஸ் குழுக்கள் குவிக்கப்பட்டுப் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.