(அட்டாளைச்சேனை செய்தியாளர்- உமர்)
கிழக்கு மாகாணத்தின் கல்வித்துறை வளர்ச்சிக்கு அயராது உழைத்து வரும் வினைத்திறன் மிக்க ஆளுமைகளில் ஒருவரான அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேசத்தை சேர்ந்த திருமதி தனுஷியா ராஜசேகர் இலங்கை கல்வி நிர்வாக சேவையில் (SLEAS) தரம் I அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். இந்த உயரிய பதவி உயர்வானது கடந்த 2026 ஜூன் 16ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் திகதி இலங்கை கல்வி நிர்வாக சேவையின் திறந்த போட்டிப் பரீட்சை (பொதுப் பிரிவு) ஊடாக இச்சேவையில் இணைந்துகொண்ட இவர் சுமார் ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாகக் கல்வித்துறையில் காத்திரமான பங்களிப்பை வழங்கி வருகின்றார்.
தனது ஆரம்ப சேவையைத் திருக்கோவில் கல்வி வலயத்தில் (2014- 2020) ஆரம்பித்த இவர், பின்னர் பட்டிருப்பு கல்வி வலயத்தில் (2020 – 2025) கடமையாற்றியிருந்தார். அதனைத் தொடர்ந்து, இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் திட்டமிடல் பிரிவில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகத் தனது தூரநோக்குச் சிந்தனையுடன் பல வினைத்திறனான கல்வித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.
“கற்றல் என்பது ஒரு தொடர் செயன்முறை” என்பதற்கு வாழும் இலக்கணமாகவும், தொழில்சார் முன்னேற்றத்திலும் தொடர்ச்சியான அறிவுத் தேடலிலும் அதீத ஆர்வம் கொண்ட திருமதி தனுஷியா ராஜசேகர், விஞ்ஞானமாணி (BSc – Bio Science), கல்வியியலில் முதுமாணி (MEd), கல்வித்துறையில் பட்டப்பின்படிப்பு டிப்ளோமா (PGDE) மற்றும் விசேட தேவையுடையோர் கல்விக்கான பட்டப்பின்படிப்பு டிப்ளோமா (PGDSNE) ஆகிய தகைமைகளைப் பெற்றுள்ளதுடன், தற்போது கல்வியியலில் தத்துவமாணி (MPhil) பட்டநெறியையும் தொடர்ந்து வருகின்றார்.
ஒரு பெண் நிர்வாக அதிகாரியாகத் தனது பொறுப்புகளை நேர்த்தியாகக் கையாண்டு பல இளம் தலைமுறையினருக்கும், குறிப்பாகப் பெண்களுக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திருமதி தனுஷியா ராஜசேகர் திகழ்கின்றார். பதவி நிலை என்ற கர்வமின்றி இன, மத பேதங்களுக்கு அப்பால் அனைவருடனும் சிறந்த மனிதநேயத் தொடர்பாடலைப் பேணி கல்வித்துறையின் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் இவரின் இந்தப் பதவி உயர்வானது அவரது பயணத்தில் ஒரு முக்கிய தடமாகும்.
தனது கடின உழைப்பால் இப்பதவி உயர்வைப் பெற்றுள்ள திருமதி தனுஷியா ராஜசேகரின் எதிர்காலப் பணிகள் மென்மேலும் சிறப்புறவும் அம்பாறை மாவட்டத்தின் கல்வித்துறை அவரது வழிகாட்டலில் தொடர்ந்தும் பல ஏற்றங்களைக் காணவும் ‘தெளிவு’ தளம் சார்பிலும், கல்விச் சமூகத்தினர் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.