அதிமேதகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் புதிய ஆட்சியில் இலஞ்ச ஊழலுக்கு எதிரான செயன்முறைகளும் அரச இயந்திரத்தை துப்பரவாக்கும் நடவடிக்கைகளும் வரலாறு காணாத வேகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான ஒரு காலகட்டத்திலும் மக்களின் அடிப்படை உரிமையான ‘தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை’ (RTI) அப்பட்டமாக மீறி அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள் செயற்பட்டு வருகின்றமை அவர்களுக்கே பாரிய ஆபத்தைத் தேடித்தரும் செயலாகும். நேர்மையாகத் தகவல் கோரும் பொதுமக்களின் கன்னத்தில் ஓங்கி அறையும் வகையிலான பகிரங்க அதிகார துஷ்பிரயோகம் இங்கு அரங்கேறியுள்ளது.
ஒரு குறிப்பிட்ட உதவிக் கல்விப் பணிப்பாளரின் நிர்வாக மோசடிகளை மூடிமறைப்பதற்காகவே இந்த தகவல்களை வழங்காமல் இருட்டடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.இதனை முழுமையாகத் தோலுரித்துக் காட்டும் அதிர்ச்சியூட்டும் ஆவணங்கள் ‘தெளிவு’ செய்தித் தளத்திற்குக் கிடைக்கப்பெற்றுள்ளன.
தற்போதைய அரசாங்கம் ஊழல்வாதிகள் மீது ஈவிரக்கமற்ற நடவடிக்கைகளை மிகத் துரிதமாக எடுத்து வரும் நிலையில் ஒரு உதவிக் கல்வி பணிப்பாளரை பாதுகாப்பதற்காக அரச அதிகாரிகள் தமது சொந்தப் பதவிகளுக்கே உலை வைத்துக்கொள்ளும் அவலம் இங்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பழைய அரசியல் கலாசாரத்தில் தப்பித்தது போல இவ்வாட்சியிலும் தப்பித்துக்கொள்ளலாம் என இவர்கள் நினைப்பது இவர்களுக்குப் பாரிய சட்ட விளைவுகளையும் தனிப்பட்ட ஆபத்துக்களையும் ஏற்படுத்தும்.
சட்டத்தின் பிரகாரம் 14 வேலை நாட்களில் வழங்கப்பட வேண்டிய தகவல்களை (இன்று(23) வரை) 147 நாட்களைக் கடந்தும் வழங்காமல் இருப்பது அதிகார மமதையின் உச்சகட்டமாகும்.
கடந்த 2026.04.29 ஆம் திகதி குறித்த உதவிக் கல்வி பணிப்பாளர் நிர்வாக செயற்பாடுகள் தொடர்பான முதலாவது RTI விண்ணப்பம் பதிவுத் தபால் ஊடாக அனுப்பபட்டது. முதலாவது RTI விண்ணப்பத்திற்கு தகவல் வழங்கப்படாத நிலையில் முன்னாள் மற்றும் இந்நாள் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு முறையே 2026.05.18 மற்றும் 2026.06.08 ஆகிய திகதிகளில் RTI விண்ணப்பம் மற்றும் நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டன.
அதனைத் தொடர்ந்து 2026.06.09 அன்று இரண்டாவது RTI விண்ணப்பம் அனுப்பப்பட்டும் எவ்வித பதிலும் இல்லை. இந்த இருட்டடிப்பைக் கிழித்தெறியும் வகையில் இறுதியாக 2026.08.28 அன்று அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளருக்கு இறுதி நினைவூட்டல் கடிதமும் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. (அனைத்து பதிவுத் தபால் பற்றுச்சீட்டுக்களினதும் ஆவணங்களினதும் பிரதிகள் தற்போது எமது செய்திப் பிரிவின் வசமுள்ளன).
இது குறித்து சட்ட வல்லுநர் ஒருவர் தெரிவிக்கையில், ‘தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கோரப்படும் தகவல்களை வேண்டுமென்றே மறைப்பது தற்போதைய ஊழல் ஒழிப்புச் சூழலில் மிகப்பாரிய குற்றமாகும். கடந்த காலங்களில் இவ்வாறான செயல்களில் ஈடுபட்ட அரச அதிகாரிகளுக்கு தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவால் பல இலட்சம் பெறுமதியான தனிப்பட்ட அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அரச சேவை ஆணைக்குழு இவ்வாறான அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவோரைப் பதவி நீக்கம் செய்து அவர்களது வாழ்நாள் ஓய்வூதியத்தையும் முற்றாக இரத்துச் செய்த உண்மையான சம்பவங்களும் உள்ளன. தற்போது ஜனாதிபதி அநுரவின் ஆட்சியில் ஊழல் ஒழிப்புப் பொறிமுறைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதால் இதற்கான தண்டனைகள் மிக கடுமையாகவும் அமையும்’ என அவர் சுட்டிக்காட்டினார்.
கோரப்பட்ட தகவல்கள் எதிர்வரும் வாரத்திற்குள் முழுமையாக வழங்கப்படாவிட்டால்்அதிமேதகு ஜனாதிபதி, இலஞ்ச ஊழல் புலனாய்வு ஆணைக்குழு (CIABOC), அரச சேவை ஆணைக்குழு, தகவல் அறியும் ஆணைக்குழு, கணக்காய்வு அதிபதி உள்ளிட்ட 17 அதிஉயர் அதிகார பீடங்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்காக அனைத்து ஆவணங்களும் எதிர்வரும் வாரம் கையளிக்கப்படும் என பாதிக்கப்பட்ட நபர் எமது செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் இதேபோன்று RTI தகவல்கள் மறுக்கப்பட்டோ, அல்லது அதிகாரிகளின் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டோ உள்ள ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் எவராவது இருப்பின் தயங்காமல் உங்களது ஆதாரங்களுடன் எமது ‘தெளிவு’ செய்தித் தளத்தைத் தொடர்புகொள்ளுங்கள். உங்களது அடையாளங்கள் பாதுகாக்கப்பட்டு, தற்போதைய அரசாங்கத்தின் ஊழலற்ற நிர்வாகக் கொள்கைக்கு அமைய நீதி பெற்றுத்தர நாம் துணைநிற்போம். எதிர்வரும் காலங்களில் இவ்வாறான அதிகாரிகளின் மறைக்கப்பட்ட பக்கங்கள் பகிரங்கமாகவே அம்பலப்படுத்தப்படும்.