அட்டாளைச்சேனை லெப்பைக்குடி சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள தாய்வழி உறவுகளின் மாபெரும் சங்கமமும் விசேட ஒன்றுகூடல் நிகழ்வும் இன்று (26) காலை 9.15 மணி தொடக்கம் அட்டாளைச்சேனை கலாசார மண்டபத்தில் மிக சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
லெப்பைக்குடி சம்மேளனத்தின் தலைவரும் கௌரவ நீதிபதியுமான எம்.எஸ். சம்சுத்தீன் தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமான இந்நிகழ்வில் லெப்பைக்குடி வம்சத்தைச் சேர்ந்த மார்க்க அறிஞர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், ஊர் பிரமுகர்கள் மற்றும் மூத்த பிரஜைகள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
நவீன கால வேலைப்பளு மற்றும் இடப்பெயர்வுகள் காரணமாகப் பல்வேறு பிரதேசங்களிலும் பரந்து வாழும் லெப்பைக்குடி உறவுகளை ஒரே குடையின் கீழ் ஒன்றிணைத்து அவர்களுக்கிடையிலான சமூக மற்றும் உறவுமுறைப் பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் உயரிய நோக்கிலேயே இந்த மாபெரும் ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தாய்வழி உறவுகளின் பாரம்பரியம் மற்றும் கூட்டுக்குடும்பத்தின் முக்கியத்துவம் ஆகியவற்றை எதிர்கால இளம் சந்ததியினருக்குக் கடத்தும் வகையிலான விழிப்புணர்வு உரைகளும், கலாசார நிகழ்வுகளும் இதில் சிறப்பம்சமாக உள்ளடக்கப்பட்டுள்ளன.
லெப்பைக்குடி சம்மேளனம் எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இந்த நிகழ்வில் விரிவாக ஆராயப்படவுள்ளது.
சமூக ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் பறைசாற்றும் வகையிலான இந்நிகழ்வு பிரதேச மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.






