ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும், முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தொடர்பான விசேட எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (28) விடுத்துள்ளது.
இன்று முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிவிப்பானது இன்று இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக மேற்குறிப்பிடப்பட்ட பகுதிகளில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அப்பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
ஆகவே, மின்னல் தாக்கங்கள் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைக் குறைத்துக்கொள்வதற்கும், பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் தேவையான தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.