Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 14, 2026

உதுமாலெப்பை எம்பியின் நிதி ஒதுக்கீட்டில் ஒலுவிலில் மின்சார விஸ்தரிப்பு பணிகள் பூர்த்தி

Posted on September 28, 2026 by Admin | 99 Views

(ஒலுவில் செய்தியாளர்)

ஒலுவில் வெளிச்சவீட்டுப் பகுதி மக்களின் நீண்டகாலத் தேவையாகக் காணப்பட்ட மின்சார விரிவாக்கப் பணிகள் மற்றும் வீதி மின்விளக்குகள் பொருத்தும் வேலைத்திட்டம் தற்போது வெற்றிகரமாக நிறைவுபெற்று பிரதேசம் ஒளியூட்டப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பையின் 2026ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட (DCB) நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட 5 இலட்சம் (0.5 மில்லியன்) ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழேயே ஒலுவில் வெளிச்சவீட்டு வீதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கான மின்சார விரிவாக்கப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தலையீட்டினால் குறித்த வீதி நெடுகிலும் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டு இருள் சூழ்ந்திருந்த அப்பிரதேசம் தற்போது இரவு நேரங்களில் முழுமையாக ஒளியூட்டப்பட்டுள்ளது.

கடலோரப் பிரதேசமான இப்பகுதியில் இரவு நேரங்களில் இருள் காரணமாகப் பொதுமக்கள், மீனவர்கள் மற்றும் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர். இப்புதிய செயற்றிட்டத்தின் மூலம் அப்பகுதி மீணவர்களின் இரவு நேரப் போக்குவரத்து இலகுவாக்கப்பட்டுள்ளதோடு சமூக விரோதச் செயல்கள் தடுக்கப்பட்டு பொதுமக்களுக்கான பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகப் மீனவர்களும், பொது மக்களும் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

மக்களின் நீண்டகாலக் கோரிக்கையைக் கருத்திற்கொண்டு துரித கதியில் நிதியினை ஒதுக்கீடு செய்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, மின்விளக்குகளைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்த அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ், இலங்கை மின்சார சபை (CEB) அதிகாரிகள் மற்றும் BSD அமைப்பினர் ஆகியோருக்குப் பொதுமக்கள் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

குறித்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல் நிறைவடையும் வரை களத்தில் நின்று முழுமையான பங்களிப்பை வழங்கிய அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான முன்னாள் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா, எம்.எல். ரினாஸ் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒலுவில் மத்திய குழுத் தலைவர் ஜெமீல் ஹாஜியார் ஆகியோரின் அர்ப்பணிப்பான சேவையும் இங்கு குறிப்பிடத்தக்கது.