Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

அக்கரைப்பற்று ஜூனியர் வித்தியாலயத்தின் புதிய பிரதி அதிபராக எம்.எஸ்.எம்.பாஹிம் கடமையேற்பு

Posted on September 30, 2026 by Admin | 107 Views

அக்கரைப்பற்று ஜூனியர் வித்தியாலயத்தின் புதிய பிரதி அதிபராக இலங்கை அதிபர் சேவை (SLPS) அதிகாரியான எம்.எஸ்.எம். பாஹிம் நேற்று (29) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

பாடசாலையின் அதிபர் எஸ்.எம். றஹீம் (SLPS) தலைமையில் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற இக்கடமையேற்பு நிகழ்வில் புதிய பிரதி அதிபருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர், உறுப்பினர்கள் மற்றும் பாடசாலையின் ஆசிரியக் குழாமினர் என பலரும் கலந்துகொண்டு புதிய பிரதி அதிபருக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன் சிறப்பு அதிதிகளாக அட்டாளைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். றஸ்மி, ஆலங்குளம் றகுமானியா வித்தியாலய அதிபர் கே.எல்.எம். முனாஸ், அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் உதவி அதிபர் எம்.எச்.எம். றசாம் உள்ளிட்ட பல கல்வி அதிகாரிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய பிரதி அதிபராகப் பொறுப்பேற்றுள்ள எம்.எஸ்.எம். பாஹிம் கல்வித்துறையில் பல வருட கால நீண்ட அனுபவமும் ஆளுமையும் கொண்டவராவார். இவர் இதற்கு முன்னர் அட்டாளைச்சேனை அந்நூர் வித்தியாலயம், அல் அர்ஹம் வித்தியாலயம், அல் ஜென்னா வித்தியாலயம் மற்றும் இக்ரஃ வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் ஆசிரியராகவும், பிரதி அதிபராகவும், அதிபராகவும் கடமையாற்றி மாணவர்களின் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் ஆசிரிய ஆலோசகராகவும் சிறப்பாகக் கடமையாற்றி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்துவதிலும் வலயத்தின் கல்வித் தரத்தை உயர்த்துவதிலும் காத்திரமான பங்காற்றியுள்ளார்.

கல்விப் பணிக்கு அப்பால் சமூக சேவைகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட ஒரு சமூக சேவையாளராகவும் இவர் அறியப்படுகின்றார். அட்டாளைச்சேனை அல் இபாதா கலாசார மன்றம் மற்றும் அட்டாளைச்சேனை ஹைராத் பள்ளிவாசல் ஆகியவற்றின் பொருளாளராகப் பதவி வகித்து வருவதுடன் பிரதேசத்தில் இயங்கும் பல்வேறு பொது அமைப்புகள், விளையாட்டுக் கழகங்கள் போன்றவற்றிலும் அங்கம் வகித்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் நலன்களுக்காகச் செயலாற்றி வருகின்றார்.

ஆளுமையும் சமூகச் சிந்தனையும் கொண்ட எம்.எஸ்.எம். பாஹிம் அவர்களின் நியமனமானது அக்கரைப்பற்று ஜூனியர் வித்தியாலயத்தின் கல்வி மற்றும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் புதியதொரு எழுச்சியை ஏற்படுத்தும் எனப் பாடசாலைச் சமூகத்தினர் மற்றும் பெற்றோர்கள் பெரும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.