Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

சர்வதேச இளம் தலைவர்கள் பயிற்சியில் பங்கேற்று நாடு திரும்பினார் அட்டாளைச்சேனை ரியா மசூர்

Posted on October 2, 2026 by Admin | 78 Views

இந்திய அரசாங்கத்தின் அனுசரணையில் நடைபெற்ற சர்வதேச இளம் தலைவர்கள் பயிற்சி நெறியில் பங்கேற்ற அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான ரியா மசூர் [BSc (Hons) in IT] பயிற்சியை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார்.

இந்தியாவின் நொய்டாவில் அமைந்துள்ள தேசிய தொழில்முனைவோர் மற்றும் சிறு தொழில் அபிவிருத்தி நிறுவனத்தின் (NIESBUD) ஏற்பாட்டில் கடந்த செப்டெம்பர் 21 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை இந்தப் பயிற்சி நெறி இடம்பெற்றது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளம் தலைவர்கள் ஒன்றிணைந்த இந்த சர்வதேச நிகழ்வில் தலைமைத்துவ ஆற்றல், புத்தாக்கச் சிந்தனை, தொழில்முனைவோர் மேம்பாடு, நிறுவன வளர்ச்சி மற்றும் சமூக மாற்றம் உள்ளிட்ட பல முக்கிய துறைகள் தொடர்பில் விரிவான பயிற்சிகளும் அனுபவப் பகிர்வுகளும் வழங்கப்பட்டன. இதில் இலங்கையின் பிரதிநிதியாக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ரியா மசூர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

தனது இந்தியப் பயணம் குறித்து கருத்துத் தெரிவித்த அவர், “இந்த சர்வதேசப் பயிற்சியின் ஊடாகப் பெற்றுக்கொண்ட புதிய சிந்தனைகள், அனுபவங்கள் மற்றும் அறிவினை எதிர்காலத்தில் அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர்களின் மேம்பாட்டிற்கும், சமூக அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் முழுமையாகப் பயன்படுத்தவுள்ளேன். இவ்வாறான சர்வதேச அனுபவங்கள் எமது இளைஞர்களின் தலைமைத்துவத் திறன்களை மெருகூட்டுவதற்கு மிகவும் அவசியமானவையாகும்” என்று குறிப்பிட்டார்.

இலங்கையின் இளம் தலைவர்களில் ஒருவராகத் தன்னை இந்தப் பயிற்சி நெறிக்குத் தெரிவு செய்தமைக்காகவும், இதற்கான வாய்ப்பினைப் பெற்றுக்கொடுத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட தரப்பினருக்கும் அவர் தனது விசேட நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் இளைஞர் அமைப்பாளராகவும் செயற்பட்டு வரும் ரியா மசூர், இந்தப் பயிற்சி நெறியின் ஊடாகப் பெற்ற சர்வதேச தொடர்புகளையும் அனுபவங்களையும் கொண்டு, எதிர்காலத்தில் காத்திரமான சமூகப் பணிகளை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.