கலகொட அத்தே ஞானசார தேரரின் காவியுடை நீண்ட காலத்திற்கு முன்னரே களையப்பட்டிருக்க வேண்டும் எனவும் தற்போதைய அரசாங்கம் நாட்டை கட்டியெழுப்பும் பணிகளில் ஈடுபட்டுள்ளதால் அதற்கு மக்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் ராஜாங்கனே சத்தாரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ள கருத்துக்கள் பின்வருமாறு:
“ஞானசார தேரருக்கு மீண்டும் காவியுடை அணிவிப்பதற்காக சில பௌத்த தேரர்கள் தற்போது பாதயாத்திரைகளை ஆரம்பித்துள்ளனர். ஆனால், பௌத்த தர்மத்தின்படி ‘பாராஜிகா’ எனப்படும் காவியுடை களையப்படுவதற்கான பல்வேறு தவறான செயல்களில் அவர் ஏற்கனவே ஈடுபட்டுள்ளார். அவர் மதுபோதையில் வாகனத்தைச் செலுத்தி நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தியுள்ளார். அத்துடன், அவருக்கு பிரான்சில் மனைவியும் மகளும் உள்ளனர். ஒரு பிக்குவின் காவியுடை களையப்படுவதற்கு இவ்வாறான தவறான செயல்களே போதுமானவையாகும்.
இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்ற போது மகாநாயக்க தேரர்களும் ஏனைய தேரர்களும் எங்கிருந்தார்கள்? ஜே.ஆர். ஜெயவர்தன முதல் ரணசிங்க பிரேமதாச, சந்திரிகா பண்டாரநாயக்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க வரை நாட்டை ஆண்ட அனைத்துத் தலைவர்களும் மகாநாயக்கர்கள் மற்றும் மகா சங்கத்தினரின் ஆலோசனைகளைக் கேட்டே நாட்டை ஆட்சி செய்தார்கள். ஆனால், அந்த காலகட்டங்களில் எந்தவொரு தேரரும் மக்களின் நலனுக்காக வீதியில் இறங்கிப் போராடவில்லை.
தற்போதைய அரசாங்கம் நாட்டை முன்னேற்றும் நோக்கில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. எனவே, அரசாங்கத்திற்கு மேலும் சிறிது கால அவகாசம் வழங்கி மக்கள் பொறுமையுடன் காத்திருந்தால், இந்த நாடு நிச்சயம் துரித அபிவிருத்தியை அடையும்” என ராஜாங்கனே சத்தாரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.