Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 14, 2026

கல்முனை கல்வி மாவட்ட ‘டாஸ்க்’ கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் சம்மாந்துறை வலய அணி சம்பியன்

Posted on October 11, 2026 by Admin | 71 Views

அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கல்முனை கல்வி மாவட்ட ‘டாஸ்க் கிரிக்கெட் கார்னிவல் – 2026’ (Task Cricket Carnival) சுற்றுப்போட்டியில் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்துள்ளது.

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் பி.எம்.வை. அறபாத் முகைதீன் தலைமையில் , இச்சுற்றுப் போட்டிக் குழுவின் செயலாளரும் சேவைக் கால ஆசிரிய ஆலோசகருமான எம்.எப்.எம். நழீரின் நெறிப்படுத்தலில் இப்போட்டிகள் மிகச் சிறப்பாக ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டிருந்தன.

இச்சுற்றுப்போட்டியில் கல்முனை கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று, கல்முனை, திருக்கோவில் மற்றும் சம்மாந்துறை ஆகிய நான்கு வலயக்கல்வி அலுவலக அணிகள் பங்கேற்றன. லீக் சுற்றில் கல்முனை, அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் ஆகிய அனைத்து அணிகளையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற சம்மாந்துறை வலய அணி இறுதிப் போட்டியிலும் அக்கரைப்பற்று அணியைத் தோற்கடித்து சம்பியன் கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டது.

போட்டி முடிவுகள்:

 சம்பியன்: சம்மாந்துறை வலய அணி

 இரண்டாமிடம்: அக்கரைப்பற்று வலய அணி

 மூன்றாமிடம்: திருக்கோவில் வலய அணி

 நான்காமிடம்: கல்முனை வலய அணி

முன்னதாக காலை நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜீ. பஸ்மில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு தேசியக் கொடியினை ஏற்றி நிகழ்வை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்ததுடன் அதனைத் தொடர்ந்து வலயக் கல்விப் பணிப்பாளர்களான பி.எம்.வை. அறபாத் முகைதீன் (அக்கரைப்பற்று), சஹுதுல் நஜீம் (கல்முனை), ஆர். உதயகுமார் (திருக்கோவில்) மற்றும் எஸ். மகேந்திர குமார் (சம்மாந்துறை) ஆகியோர் தங்களது வலயக் கொடிகளை ஏற்றி வைத்ததுடன் வலயக் கீதங்களும் இசைக்கப்பட்டன.

இறுதி நிகழ்வில் திருக்கோயில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர். உதயகுமார் மற்றும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் பி.எம்.வை. அறபாத் முகைதீன் ஆகியோர் இணைந்து வெற்றிபெற்ற அணிகளுக்கான கிண்ணங்களை வழங்கி கௌரவித்தனர்.

இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.எச். பௌஸ், திருமதி தனுஷியா ராஜசேகர், ஏ.எல். அப்துல் மஜீத், ஏ.எம். ஹசீம், ஏ.எம். நௌபர்டீன், எஸ். அம்ஜத்கான், கணக்காளர்களான கே. லிங்கேஸ்வரன், யூ.எல்.எம். றினோஸ், கோட்டக் கல்விப் பணிப்பாளர்களான எம்.எச்.எம். றஸ்மி, கே. ஹம்சா, உதவிக் கல்விப் பணிப்பாளர்களான அல்-ஹாஜ் ஏ.எல். பாயிஸ், ஏ.ஆர்.எம். மனாப் உட்பட பல கல்வி அதிகாரிகளும், அதிபர்களும் கலந்து சிறப்பித்தனர்.

அடுத்த வருடத்துக்கான (2027) ‘டாஸ்க் கிரிக்கெட் கார்னிவல்’ சுற்றுப்போட்டி திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் என திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர். உதயகுமார் இதன்போது உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.