மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திலிருந்து வாவியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற 19 வயதுடைய யுவதியொருவர் அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களால் காப்பாற்றப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் செவ்வாய்க்கிழமை (13) இரவு 8.00 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவதினமான செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் கல்லடி பழைய பாலத்திற்கு வந்த குறித்த யுவதி தனது பாதணிகள், கைப்பை மற்றும் குடை ஆகியவற்றை பாலத்தின் மீது வைத்துவிட்டு வாவியில் குதித்துள்ளார். இதன்போது அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் இதனை அவதானித்து, உடனடியாகச் செயற்பட்டு யுவதியை உயிருடன் மீட்டு கரைக்குக் கொண்டுவந்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் 1990 அவசர அம்பியூலன்ஸ் சேவை ஊடாக குறித்த யுவதியை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.
தற்கொலைக்கு முயன்ற இந்த யுவதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வெளியேயுள்ள வேறொரு பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. எனினும் அவர் தற்கொலைக்கு முயன்றமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.