கிண்ணியா கல்வி வலயத்தின் கிண்ணியா கோட்டக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றி வந்த எம்.ஜே.எம். ரியாஸ் அவர்கள் தனது 37 வருடகால அளப்பரிய கல்விச் சேவையை நிறைவு செய்து இன்றுடன் ஓய்வுநிலை பெறுகின்றார்.
அளுத்கம, தர்கா நகரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 1966 ஒக்டோபர் 18ஆம் திகதி பிறந்தார். தனது ஆரம்பக் கல்வி முதல் உயர்தரம் (தரம் 1 – 13) வரையான கல்வியை அநுராதபுரம், விஜிதபுர கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரியில் பயின்றார். தொடர்ந்து தனது உயர்கல்வியைத் தொடர்ந்த இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் (B.A) பட்டத்தினையும் பின்னர் பட்டப்பின் கல்வி டிப்ளோமா (PGDE) மற்றும் பாடசாலை முகாமைத்துவ டிப்ளோமா (DSM – Merit) ஆகிய தகைமைகளையும் பெற்றுக்கொண்டார்.
கல்வித் துறையின் மீதான ஆர்வத்தினால் 1989.09.01 அன்று ஆரம்ப உதவி ஆசிரியராக தனது முதல் நியமனத்தைப் பெற்று அரச சேவையில் காலடி எடுத்து வைத்தார். அதனைத் தொடர்ந்து 1993ஆம் ஆண்டு பட்டதாரி ஆசிரியராக நியமனம் பெற்று பல்வேறு பிரதேசங்களிலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அயராது உழைத்தார்.
தனது அர்ப்பணிப்பான சேவையின் ஊடாக 2012ஆம் ஆண்டு இலங்கை அதிபர் சேவைக்குத் (SLPS) தெரிவு செய்யப்பட்ட இவர்2018ஆம் ஆண்டு அதிபர் சேவையின் தரம் – I (SLPS-I) இற்குப் பதவி உயர்வு பெற்றார்.
இவரது சிறந்த நிருவாகத் திறமையின் காரணமாக 2021ஆம் ஆண்டு கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்திலும் 2022ஆம் ஆண்டு கிழக்கு மாகாண கல்வி அமைச்சிலும் இணைக்கப்பட்டு சிறப்பாகச் சேவையாற்றினார். அதனைத் தொடர்ந்து 2025 மே மாதம் முதல் கிண்ணியா கோட்டக் கல்விப் பணிப்பாளராகப் (DEO) பொறுப்பேற்று ஓய்வுபெறும் வரை அப்பதவியில் திறம்படப் பணியாற்றி வந்தார்.
சுமார் 37 வருடங்களாக ஆசிரியராகவும், அதிபராகவும், சிறந்த கல்வி நிருவாகியாகவும் திகழ்ந்து கல்விச் சமூகத்திற்கு அரும்பணியாற்றிய இவரது சேவை நன்றியுடன் நினைவுகூரப்படுகிறது. ஓய்வுபெற்றுச் செல்லும் இவரது எதிர்கால வாழ்க்கை நல்லாரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் அமைய கல்விச் சமூகத்தினர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.