Top News
| இரண்டு வருடங்கள் கடந்தும் நிர்மாணிக்கப்படாத அட்டப்பள்ளம் பாலம்! நாளை பாராளுமன்றத்தில் உதுமாலெப்பை எம்.பி. கேள்வி | | தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் பீடாதிபதி அப்துல் முனாஸின் புதல்வர் அய்யாஸ் பொறியியல் பட்டம் பெற்றார் | | அட்டாளைச்சேனை அல்-ஜென்னாஹ் வித்தியாலயத்தின் புதிய அதிபராக எம்.ஐ.எம்.றியாஸ் கடமையேற்பு |
Oct 24, 2026

நாடளாவிய மின்தடைக்கான உண்மைக் காரணத்தினை வெளியிட்ட பிரதி அமைச்சர்

Posted on October 17, 2026 by Admin | 152 Views

மேல் கொத்மலை நீர்மின் நிலையத்தின் மின்னுற்பத்தி இயந்திரமொன்றின் மீது ஏற்பட்ட பலத்த மின்னல் தாக்கமே நாடு முழுவதும் நேற்று (17) ஏற்பட்ட திடீர் மின்தடைக்குப் பிரதான காரணம் என வலுசக்தி பிரதி அமைச்சர் அக்ரம் இலியாஸ் தெரிவித்தார்.

மேல் கொத்மலை மின்நிலையத்திலுள்ள இரண்டு பிரதான மின்னுற்பத்தி அலகுகளில் ஒன்றின் மீது மின்னல் தாக்கியதில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் தேசிய மின் கட்டமைப்பின் மீடிறன் (Frequency) மற்றும் மின் சமநிலை என்பன ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டு நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் முற்றாகத் தடைப்பட்டதாகப் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை செயலிழந்திருந்த பிரதான தேசிய மின்சார விநியோகக் கட்டமைப்பு தற்போது முழுமையாக வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கட்டமைப்பு இயக்க நிறுவனம் (System Operator) அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை மற்றும் கட்டமைப்பு இயக்கப் பொறியியலாளர்களின் தீவிர முயற்சியைத் தொடர்ந்து பிரதான அதிஉயர் அழுத்த மின் விநியோக வலையமைப்பு முழுமையாகச் செயற்படுத்தப்பட்டுள்ளது. பிராந்திய மட்டத்திலுள்ள உப மின்நிலையங்கள் ஊடாக வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கான மின் விநியோகத்தைக் கட்டம் கட்டமாக வழமைக்குக் கொண்டுவரும் பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இன்று முற்பகல் ஏற்பட்ட இந்தத் திடீர் மின்தடையினால் நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகள், வீதிச் சமிக்ஞை விளக்குகள் மற்றும் அரச, தனியார் பொதுச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அத்துடன், மின்தடை காரணமாக நீர் இறைக்கும் நிலையங்களின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்ததால் நீரைப் பொதுமக்கள் மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

தேசிய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட இந்தத் திடீர் அதிர்வைத் தொடர்ந்து 900 மெகாவாட் கொள்ளளவு கொண்ட நுரைச்சோலை லக்விஜய அனல்மின் நிலையத்தின் மூன்று மின்னுற்பத்தி இயந்திரங்களும் ஒரே நேரத்தில் செயலிழந்துள்ளன. குறித்த நிலக்கரி மின்னுற்பத்தி இயந்திரங்களை மீள இயக்கி தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கு இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை செல்லக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகின்றது