அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றி வரும் திருமதி ஜிஹானா ஆலிப் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் (SLEAS) தரம் I (Class I) அதிகாரி நிலைக்குப் பதவி உயர்வு பெற்றுள்ளார். இவரது இப்பதவி உயர்வானது 2026.06.16 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் மருதமுனையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் (BA) பட்டத்தினைப் பூர்த்தி செய்தவராவார். அதனைத் தொடர்ந்து கடந்த 2014.06.16 அன்று இலங்கை கல்வி நிர்வாக சேவையின் திறந்த – பொதுப் பிரிவின் (Open – General Cadre) ஊடாக கல்வி நிர்வாகத் துறையில் தனது சேவையை ஆரம்பித்தார்.
தனது ஆளுமையையும் நிபுணத்துவத்தையும் தொடர்ச்சியாக மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்குடைய இவர் பணிக்கு மத்தியில் பல்வேறு உயர்கல்வி மற்றும் தொழில்சார் தகைமைகளையும் தன்வசப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக கல்வியியல் முதுமாணி (MEd – Master of Education), கல்வி முகாமைத்துவ முதுமாணி (MEd in Management), பட்டப்பின் கல்வி டிப்ளோமா (PGDE), கல்வி நிர்வாக பட்டப்பின் டிப்ளோமா (PGDEA) ஆகிய உயர்கல்வித் தகைமைகளுடன், ஆங்கில மொழி டிப்ளோமா (Dip. in English) மற்றும் தகவல் தொழில்நுட்ப டிப்ளோமா (Dip. in IT) ஆகியவற்றையும் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளார்.
கல்வி நிர்வாகத் துறையில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் திருமதி ஜிஹானா ஆலிப், தற்போது அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் கல்வித் தர மேம்பாடு மற்றும் நிர்வாகச் செயற்பாடுகளில் காத்திரமான பங்களிப்பினை வழங்கி வருகின்றார்.
இலங்கை கல்வி நிர்வாக சேவையின் உயர் நிலையான தரம் I இற்குப் பதவி உயர்வு பெற்றுள்ள இவரது எதிர்காலக் கல்விப் பணிகள் மென்மேலும் சிறக்கவும் நாட்டின் கல்வித்துறைசார் முன்னேற்றத்திற்கு இவரது சேவை தொடர்ந்தும் வலுச்சேர்க்கவும் கல்விச் சமூகத்தினரும் நலன்விரும்பிகளும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.