ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “லீடர் அஷ்ரஃப் கிண்ணம்” மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (31) அட்டாளைச்சேனை அஷ்ரஃப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் வெகு விமரிசையாக ஆரம்பமானது.
மறைந்த பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் நாமத்தை நினைவுகூரும் வகையிலும் பிரதேச இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவித்து அவர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கிலும் இச்சுற்றுப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் அமைப்பாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமான ரியா மசூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் தேசிய அமைப்பாளரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு போட்டிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் கௌரவ மற்றும் விசேட அதிதிகளாக கட்சியின் பிரதித் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எஸ்.உவைஸ், கட்சியின் அம்பாறை மாவட்டச் செயலாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.சி.சமால்தீன், கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான ஏ.கே.அமீர், பாமி மன்சூர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
அதிதிகள் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டு போட்டியில் பங்குபற்றும் அணிகளின் வீரர்களுடன் அறிமுக நிகழ்வு இடம்பெற்றதைத் தொடர்ந்து முதலாவது பந்து வீசப்பட்டு போட்டிகள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அட்டாளைச்சேனை பிரதேசத்தின் பல்வேறு முன்னணி விளையாட்டுக் கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பல அணிகள் மோதும் இச்சுற்றுப்போட்டியைக் காண பெருந்திரளான கிரிக்கெட் ரசிகர்களும், கட்சி ஆதரவாளர்களும், பிரதேச முக்கியஸ்தர்களும் மைதானத்தில் திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




