தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மாணவர்களிடையே வாசிப்பின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் வகையிலான விசேட நிகழ்வுகளும் புத்தகக் கண்காட்சியும் அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயத்தில் அதிபர் என்.கே.எம்.மிஸ்வர் தலைமையில் அண்மையில் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.அப்துல் றசாக் மற்றும் கோட்டக் கல்வி அதிகாரி எம்.எச்.றஸ்மி ஆகியோர் பிரதம மற்றும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதன்போது வாசிப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையிலும், மாணவர்களின் அறிவுத் தேடலைத் தூண்டும் விதத்திலும் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.அப்துல் றசாக் அவர்களினால் சிறப்புரை ஆற்றப்பட்டது. அத்துடன் மாணவர்களின் வாசிப்பு ஆர்வத்தை மென்மேலும் வளர்க்கும் நோக்கில் பாடசாலை நூலகத்தில் விசேட புத்தகக் கண்காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மாணவர்களின் ஆளுமை மற்றும் படைப்பாற்றல் திறன்களை வெளிக்கொணரும் வகையில் கவிதை, கட்டுரை, சிறுகதை, பேச்சு, அறிவுக்களஞ்சியம் மற்றும் விவாதம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும் வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் விசேட விழிப்புணர்வு நாடகம் ஒன்றும் மாணவர்களினால் தத்ரூபமாக அரங்கேற்றப்பட்டது.
நிகழ்வின் இறுதியில் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு அதிதிகளினால் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.