அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் உயரம் பாய்தல் (High Jump) நிகழ்ச்சியில் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தைச் சுவீகரித்த அட்டாளைச்சேனை தேசியப் பாடசாலை மாணவன் என்.அப்துல்லாஹ்விற்கு அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயச் சமூகத்தினால் நேற்று(03) வரவேற்பு அளிக்கப்பட்டது.
அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டாளைச்சேனை தேசியப் பாடசாலையில் கல்வி பயிலும் இம்மாணவன் தேசிய மட்டத்தில் தனது அபார திறமையை வெளிப்படுத்தி பாடசாலைக்கும் அட்டாளைச்சேனை மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ள இம்மாணவன் அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் விஞ்ஞானப் பாட முன்னாள் ஆசிரிய ஆலோசகரான மர்ஹூம் நிலூபர் ஆசிரியர் மற்றும் ஆசிரியை றஹீமா ஆகியோரின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய மட்ட வெற்றியுடன் தமது சொந்த ஊருக்குத் திரும்பிய சாதனை மாணவன் அப்துல்லாஹ்வை பிரதேச மக்களும் பாடசாலைச் சமூகத்தினரும் இணைந்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
இவ்வூர்வலம் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தை வந்தடைந்த போது வித்தியாலய அதிபர், ஆசிரியர் குழாம் மற்றும் மாணவர்களினால் அம்மாணவனுக்கு மாலை அணிவித்து விசேட வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் அவரது எதிர்கால விளையாட்டுத்துறை மற்றும் கல்விப் பயணங்கள் மென்மேலும் சிறக்க வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டன.
வலயம், மாகாணம் போன்ற மட்டக்களிலிருந்து தேசிய மட்டம் வரை தமது திறமைகளைப் பறைசாற்றி வரும் இத்தகைய இளம் வீரர்களின் சாதனைகள் கிழக்கு மாகாணத்தின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்குப் புதிய உத்வேகத்தை அளிப்பதாகக் கல்விமான்களும் பிரதேச முக்கியஸ்தர்களும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.