Top News
| இலங்கைச் சட்டத்துறையில் 40 ஆண்டுகள் நிறைவு: ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் எம்.பி.க்கு பொழியும் வாழ்த்து மழை | | 40,000 புனித குர்ஆன் பிரதிகளை விடுவித்து 83 அரபுக் கல்லூரிகளின் பதிவுத் தடையை நீக்க அவசர நடவடிக்கை | | இலங்கை கிரிக்கெட் புள்ளிக்கணிப்பாளராக நிந்தவூர் அப்துர் ரஹ்மான் தெரிவு |
Nov 20, 2026

அட்டாளைச்சேனை பிரீமியர் லீக் உதைபந்தாட்டப் போட்டியில் ‘லியாடி பிளேஸ்’ அணி சாம்பியன்

Posted on November 5, 2026 by Admin | 83 Views

அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர்களின் விளையாட்டுத் திறமைகளைத் தேசிய மட்டத்திற்கு வெளிக்கொணரும் நோக்கில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘அட்டாளைச்சேனை பிரீமியர் லீக் (AFPL – Season 01)’ மாபெரும் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் ‘லியாடி பிளேஸ்’ (Liyadi Blaze) அணி அபார வெற்றிபெற்று முதலாவது சாம்பியன் கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டது.

விஷன் ஹவுஸ் (Vision House Pvt Ltd) தனியார் நிறுவனத்தின் பிரதான அனுசரணையுடன் அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்தப் பொது விளையாட்டு மைதானத்தில் இச்சுற்றுப்போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பிரதேசத்தின் முன்னணி அணிகளான டேலுக் எப்.சி (Daylook FC), ஜூனியோபிக்ஸ் யுனைடெட் (Juniopix United), ஒக்ஸ்போ வாரியர்ஸ் (Oxpo Warriors), லியாடி பிளேஸ் (Liyadi Blaze), சாரா ஸ்ட்ரைக்கர்ஸ் (Saara Strikers) மற்றும் ஏ.கே.டி (AKD) ஆகிய ஆறு அணிகள் பங்கேற்றுத் தமது திறமைகளை வெளிப்படுத்தின.

விறுவிறுப்பாக இடம்பெற்ற குழுநிலைப் போட்டிகளின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ‘லியாடி பிளேஸ்’ மற்றும் ‘சாரா ஸ்ட்ரைக்கர்ஸ்’ ஆகிய இரு அணிகளும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. பெருந்திரளான விளையாட்டு ரசிகர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இரு அணிகளும் சமபலம் வாய்ந்தவையாகக் களமாடின. ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோலைப் பதிவு செய்தமையால் ஆட்டம் 1–1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் (Draw) நிறைவடைந்தது.

வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்காக வழங்கப்பட்ட ‘பெனால்டி’ (Penalty Shootout) வாய்ப்பில் 5–4 என்ற கோல் கணக்கில் சாரா ஸ்ட்ரைக்கர்ஸ் அணியை வீழ்த்தி லியாடி பிளேஸ் அணி திரில் வெற்றி பெற்றதுடன் முதலாவது AFPL சாம்பியன் மகுடத்தையும் சூடிக்கொண்டது.

AFPL அமைப்பின் தலைவர் ஐ.எல். ஹாரூன் தலைமையிலும் அதன் செயலாளர் எம்.டி.எம்.சில்மியின் நெறிப்படுத்தலிலும் நடைபெற்ற இதன் பரிசளிப்பு விழாவில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

நிகழ்வின் விசேட அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ், கௌரவ அதிதிகளாக விஷன் ஹவுஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் ரசாத் முஹம்மத், உதவிக் கல்விப் பணிப்பாளர் (ADE) ஏ.எல்.பாயிஸ், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.சி.நியாஸ், ரியாஸ், ஓய்வுபெற்ற அதிபரும் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளருமான எம்.ஏ.அன்சார், அதிபர் எம்.ஐ.எம்.ரியாஸ், உயர்பீட உறுப்பினர் ஏ.கே.அமீர், ஏ.சி. இமாமுதீன், நிலாம் பள்ளிவாசல் தலைவர் மற்றும் AFPL நிர்வாக உறுப்பினர்கள், அனுசரணையாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது சாம்பியன் பட்டம் வென்ற லியாடி பிளேஸ் அணிக்கு வெற்றிக் கிண்ணத்துடன் 60,000 ரூபா பணப்பரிசும், வீரர்களுக்கான பதக்கங்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன. இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட சாரா ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு 40,000 ரூபா பணப்பரிசும் வெற்றிக்கிண்ணமும் பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.