ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் மற்றும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோர் இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்டின் அவர்களை இன்று (05) கொழும்பிலுள்ள கனடிய உயர்ஸ்தானிகராலயத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இச்சந்திப்பின் போது நாட்டின் சமகால அரசியல் நிலவரங்கள், ஜனநாயக உரிமைகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.
இதன்போது கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், தற்போதைய அரசாங்கம் ஜனநாயகத்திற்கு முரணான சட்டங்களைக் கொண்டுவருவது குறித்துத் தனது அதிருப்தியை வெளியிட்டார். குறிப்பாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் தடுப்புச் சட்டம் (Organized Crime Act) ஆகியவை தொடர்பிலான அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் குறித்து அவர் கனடிய உயர்ஸ்தானிகரிடம் தெளிவுபடுத்தினார்.
அத்துடன் மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் அரசாங்கம் தொடர்ச்சியாக இழுத்தடித்து வருவது குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தான் ஒரு உறுப்பினராக அங்கம் வகித்த போதிலும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான எந்தவொரு அக்கறையும் அரசாங்கத்திற்கு இருப்பதாகத் தெரியவில்லை எனவும் அவர் கவலை வெளியிட்டார்.
அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய இரண்டு முக்கிய நீர்ப்பாசனத் திட்டங்களின் அவசியம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை இதன்போது விளக்கமளித்தார். அம்பாறை மாவட்ட மக்களின் விவசாய நடவடிக்கைகளுக்கும் குடிநீர்த் தேவைக்கும் மிகவும் அத்தியாவசியமான ‘சம்புக்களப்பு – பெரியகளப்பு’ நீர்ப்பாசனத் திட்டம் மற்றும் ‘ஹெடஓயா’ நீர்ப்பாசனத் திட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டினார்.
குறித்த திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ள போதிலும் நிதி நெருக்கடிகள் ஏற்படும் பட்சத்தில் கனடா அரசாங்கம் இதற்கான நிதியுதவிகளைப் பெற்றுத்தர முன்வர வேண்டும் என எம்.எஸ்.உதுமாலெப்பை எம்.பி. கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களைக் கவனமாகக் கேட்டறிந்த கனடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்டின் உரிய விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் துறைசார் அமைச்சர்களைச் சந்திக்கும் போது விசேட கவனம் செலுத்துவதாக உறுதியளித்தார்.