Top News
| இலங்கைச் சட்டத்துறையில் 40 ஆண்டுகள் நிறைவு: ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் எம்.பி.க்கு பொழியும் வாழ்த்து மழை | | 40,000 புனித குர்ஆன் பிரதிகளை விடுவித்து 83 அரபுக் கல்லூரிகளின் பதிவுத் தடையை நீக்க அவசர நடவடிக்கை | | இலங்கை கிரிக்கெட் புள்ளிக்கணிப்பாளராக நிந்தவூர் அப்துர் ரஹ்மான் தெரிவு |
Nov 20, 2026

கிராஅத் போட்டியில் மாகாணத்தில் முதலிடம் பெற்ற அட்டாளைச்சேனை மாணவன் முஹைமீன் கௌரவிப்பு

Posted on November 7, 2026 by Admin | 126 Views

இவ்வருடம் (2026) இடம்பெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான இஸ்லாமிய கலாசாரப் போட்டிகளில் மாகாண மட்ட கிராஅத் போட்டியில் முதலிடம் பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ள அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் ஏ.ஆர்.முஹைமீன் அவர்களைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு அட்டாளைச்சேனை ரஹ்மானியாபாத் ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாக சபையின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை ரஹ்மானியாபாத் ஜும்ஆ பள்ளிவாயலின் தலைவர் எம்.எச். ஷர்மி (MLT) தலைமையில் ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து பள்ளிவாயல் வளாகத்தில் அண்மையில் (06) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

பெருந்திரளான ஜமாஅத்தினரின் முன்னிலையில் இடம்பெற்ற இக்கௌரவிப்பு நிகழ்வில் மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்று பிரதேசத்திற்குப் பெருமை சேர்த்த மாணவன் ஏ.ஆர்.முஹைமீன் அவர்களுக்கு நினைவுச்சின்னம் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் அம்மாணவனின் இச்சாதனைக்குப் பக்கபலமாகத் திகழ்ந்த அவரது தந்தையும் இதன்போது விசேடமாகப் பாராட்டி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகப் பிரபல மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் அக்ரம் அபூபக்கர் (நளீமி) கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், கௌரவ அதிதியாக அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் அதிபர் ஏ.எல். பாயிஸ், விசேட அதிதிகளாக ரஹ்மானியாபாத் ஜும்ஆ பள்ளிவாயலின் முன்னாள் தலைவர்களான அதிபர் எம்.எச்.அப்துர் ரஹ்மான் மற்றும் ஓய்வுபெற்ற அதிபர் எம்.ஏ.அன்சார் ஆகியோரும், பள்ளிவாயல் நிர்வாக சபை உறுப்பினர்கள், உலமாக்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் மற்றும் ஜமாஅத்தார்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இளம் வயதில் அல்குர்ஆன் கிராஅத் துறையில் மாகாண மட்டத்தில் சாதனை படைத்து தேசிய மட்டத்திற்குத் தெரிவாகியுள்ள மாணவன் ஏ.ஆர்.முஹைமீன் தேசிய மட்டத்திலும் முதலிடம் பெற்று அட்டாளைச்சேனை மண்ணிற்கு மென்மேலும் பெருமை சேர்க்க வேண்டுமென நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.